கோவைக்கு ரயில்கள் மூலம் இதுவரை 674.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது

கோவைக்கு ரயில்கள் மூலம் 674.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது என அரசு வட்டார போக்குவரத்து அலுவலர் (மத்திய) ஜெ.கே.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை தீவிரமெடுக்க தொடங்கியது. நோய்த் தொற்று பரவலின் வேகமும், வீரியமும் அதிகமாக இருந்ததால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. முதல் அலையைக் காட்டிலும் 2 ஆவது அலையில் கொரோனா நோய்த் தொற்றினால் நுரையீரல் பாதிப்பு அதிகரித்து பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் ஆக்சிஜன் வழங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டி இருந்தது.

நாடு முழுவதும் இதே நிலை காணப்பட்டதால் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் இருந்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜனும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கோவையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் ஆக்சிஜன் ரயில்கள் இயக்கட்டு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

அதன்படி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவைக்கு ஆக்சிஜன் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் கோவைக்கு இதுவரை ரயில்கள் மூலம் 674.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது. இதனை கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (மத்திய) ஜெ.கே.பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் சிறப்பான முறையில் பாதுகாப்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் பிரித்து வழங்கினர்.

இது தொடர்பாக அரசு வட்டார போக்குவரத்து அலுவலர் (மத்திய) ஜெ.கே.பாஸ்கரன் கூறியதாவது: கோவைக்கு இதுவரை 11 ஆக்சிஜன் ரயில்கள் மூலம் 674.54 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வந்துள்ளது. கடைசியாக ஜூன் 24 ஆம் தேதி ஆக்சிஜன் ரயில் வந்தது. இதனை போலீஸார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்சிஜன் ரயில் வருவதற்கு முன்பே ரயில் நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜனை இறக்கி பிரித்து அனுப்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன் குழுவினர் தயார் நிலையில் இருப்பர். இதனால் எந்தவித பிரச்னையுமின்றி திரவ ஆக்சிஜன் பாதுகாப்பாக பிரித்து அனுப்ப முடிந்தது. தவிர திரவ ஆக்சிஜன் ஏற்றி வந்த கன்டெய்னர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 11 கன்டெய்னர்கள் சரக்கு விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ரூர்கேலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. என்றார்.