பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சியை சேர்த்ததே சாதனை !

 

– டாக்டர் ஆஷா ராவ்,
நிர்வாக இயக்குனர், ராவ் ஹாஸ்பிடல் & கேர்

கூர்மையான பார்வை, அமைதியான முகம், நம்பிக்கை ஊட்டும் பேச்சு, கைராசிக்கார மருத்துவர் என்ற நற்பெயர் ஆகியவை டாக்டர் ஆஷா ராவை பற்றி ஒரு கணம் நினைத்தால் மனதில் உடனே நினைவுக்கு வருவது இவைதான்.

கோவை பகுதியில் ‘ராவ் ஹாஸ்பிடல்’ என்ற மருத்துவமனையை கேள்விப் படாதோர் இருக்க முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை 65 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வரக்கூடிய ராவ் ஹாஸ்பிடலின் முகம் டாக்டர் ஆஷா ராவ் என்றே சொல்லலாம்.
குழந்தை பாக்கியம் கிடைத்திடாத எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்திருக்கும் இந்த சாதனைப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றின் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை இந்தாண்டு மருத்துவர் தினத்தை முன்னிட்டு பார்க்கலாம்.

 

மருத்துவ கனவு :

மருத்துவர்கள் மீது அதிக மரியாதை கொண்டவர் என் தாயார். என் அம்மா, அப்பா இருவரும் கர்நாடகாவில் ஆசிரியர்களாக இருந்தனர். அம்மாவின் வாழ்க்கையில் கல்வி கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது மருத்துவராக இருந்த அவரின் மாமா. எனவே சிறு வயதிலிருந்து அவருக்கு மருத்துவர்கள் மீது அதிக மரியாதை இருந்தது. என்னையும் மருத்துவராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், அனைவருக்கும் நன்மை செய்யவேண்டும் எனக் கூறி என்னை வளர்த்தார் அம்மா.
நான் பிறந்தது, வளர்ந்தது கர்நாடக மாநிலத்தின் மங்களூர் பகுதியில். எனக்கு அறிவியல் பாடங்களின் மேல் ஆர்வம் அதிகம் இருந்தது. அப்போது 11 ம் வகுப்பு, 12 ம் வகுப்பெல்லாம் கிடையாது, அதற்கு பதில் ‘ப்ரீ யூனிவர்சிட்டி கோர்ஸ்’ என்று சொல்வார்கள். இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் மருத்துவம் பயில முடியும்.

“நாம் நடுத்தர குடும்பத்தினர் மா. நம்மால் அதிக பணம் செலுத்தி மருத்துவ சீட் வாங்க முடியாது. நீ நல்ல மதிப்பெண் பெற்றால் உனக்கு சீட் உண்டு” என்று என் அப்பா அப்போது சொன்னார். ஒருவேளை என்னால் மருத்துவராக முடியவில்லை என்றால் கணிதத்தில் எனக்கு இருந்த ஆர்வத்திற்கு என்னால் நிச்சயம் கணித ஆசிரியராக வர முடியும் என்று எண்ணினேன், இருந்த போதிலும் மருத்துவத்தில் தான் மனம் நிறைந்திருந்தது.

அன்று பி.யூ.சி. முடிவுகள் வெளிவந்து, நான் மாநிலத்திலேயே 10-வது இடத்தைப் பெற்றிருந்தேன், எனது மருத்துவக் கனவு பலித்தது. புகழ்பெற்ற மைசூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

 

கல்லூரி காலம்:

கல்லூரி காலத்தில், அதுவும் மருத்துவம் படிக்கும் போது விளையாட்டாக இருக்கக்கூடாது என்று அடிக்கடி நினைப்பேன். அப்போது வேடிக்கை பார்க்க காலமில்லை. படிப்பு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. மாதத்திற்கு ரூ.100 உதவித்தொகையாக கிடைக்கும். அதில் பாதி கல்லூரி விடுதிக்கு செல்லும், மீதி தேவையான புத்தகங்கள் வாங்க போய்விடும். பொருளாதார நிலை அவ்வாறு இருந்தது!

நான் நன்றாக படிப்பேன். முதல் மதிப்பெண் வாங்கவேண்டும், மருத்துவராகி அம்மா ஆசைப்பட்டது போல் பலரின் வாழ்க்கையில் வெளிச்சம் தரும் நபராக விளங்கவேண்டும் என்று ஆர்வம் என்னை தூங்க விடவில்லை. எனவே ஒரு நாளில் உள்ள 24 மணி நேரம் எனக்கு போதவில்லை.
வகுப்பில் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வேன். அப்போது அவர்கள் கண்களில் கிடைக்கும் பாராட்டுப் பார்வை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி ஊட்டுகிறது.

 

திருப்பம்:

கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்துவந்த போது எனக்கு 20 வயது, எனது தம்பிக்கு 16 வயது இருக்கும். அவனும் பி.யூ.சி. படிக்க துவங்கினான். திடீரென மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு 5 நாட்களில் அவன் இறந்து போனான். என் மனம் மிகவும் இறுகியது, அவனை இழந்தது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வருத்தத்துடன் இருந்த என் அம்மா அப்பாவிடம் அப்போது, டாக்டர் ராவ் அவர்களின் பெற்றோர் என்னை பெண் கேட்டனர். கல்லூரி காலத்தின் மூன்றாம் ஆண்டே எனக்கு திருமணம் செய்துவைத்தனர். மருத்துவக் குடும்பத்தில் மருமகளானேன். அவர்கள் என்னை மிகவும் அன்போடு பார்த்துக்கொண்டனர். என் கணவர் டாக்டர் ராவ் என்னை நன்றாக படித்து சாதிக்க ஊக்கம் தந்தார். என் கனவுகளை புரிந்து கொண்டார். என் படிப்பில் மிகவும் அக்கறை காட்டினார். என் வாழ்க்கையில் திருமணம் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

‘டாக்டர்’ ஆஷா ஆர்.ராவ்:

மருத்துவப் படிப்பு விறுவிறு என்று செல்ல, இறுதித் தேர்வுகள் வந்தது. அவற்றை எழுதிமுடித்து, முடிவுகள் வெளியாக காத்திருந்தேன். பல்கலைக்கழகத்திலேயே நான் தான் முதல் மதிப்பெண் பெற்றேன் என்று முடிவுகள் வந்தது. என்னைப் போல் என் கணவர், என் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் என் மாமனார் கோவையில் நிறுவிய ராவ் ஹாஸ்பிடலில் மருத்துவராகவும், இயக்குனராகவும் சேர்ந்தேன்.

எனது கணவர் டாக்டர் ராவ், 1977ல் லேப்ராஸ்கோபி எனப்படும் நவீன சிகிச்சையை மிக பிரபலமான முறையில் செய்தார். இன்று இத்துறையில் நிறைய பாடங்கள், கற்றுத்தர நல்ல ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர், அன்று அது குறைவே. அவர் அதில் நல்ல திறமை கொண்டவராக விளங்கினார்.
நான் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை பற்றி பல விஷயங்களை அறிய 1984 ல் ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்றேன். அதன் பின், இங்கு வந்து மருத்துவத்தை தொடர்ந்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த வெகுநாட்கள் குழந்தை இல்லாத தம்பதிக்கு 1996-ல் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மூலம் குழந்தை பாக்கியத்தை வெற்றிகரமாக வழங்க முடிந்தது.

ராவ் ஹாஸ்பிடல் கருத்தரிப்பு தொடர்பான சிகிச்சைகளில் ஒரு முன்னோடியாக திகழத் தொடங்கியது. 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பிறந்தன. இன்று லேப்ராஸ்கோபி, கருத்தரிப்பு தொடர்பான சிகிச்சைகளில் முன்னிலையில் உள்ளது இம்மருத்துவமனை.

 

தளர்ந்த முகத்தில் மகிழ்ச்சி:

எத்தனையோ பெண்கள் ‘தாய்மை என்ற வரத்தை அடைய முடியவில்லை’ என்ற வருத்ததுடன் இங்குவந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டு குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் நன்றி என்று சொல்லி செல்கின்றனர். இதில் கிடைக்கும் சந்தோசத்திற்கு இணை எதுவும் இருக்கமுடியாது.
‘நான் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேனா?’ என்று கேட்டால்… சிலவற்றை சாதித்துள்ளேன், ஆனால் குழந்தைகள் நலன், பெண்கள் நலன் குறிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எங்கள் ‘மீரா-சாரதா அறக்கட்டளை’ மூலம் புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல வேலைகளை செய்ய வேண்டும்.

 

நன்றிகடன்:

20 வயதில் திருமணம் ஆன நாளிலிருந்து நம்பிக்கையும் அன்பையும் தந்து, என் கனவை நிஜமாக்க துணையாக இருந்த எனது கணவருக்கு முதல் நன்றி. என்னை வளர்த்த அன்பு பெற்றோருக்கும், வாழ்க்கையில் இன்னொரு பெற்றோராக இருந்த என் மாமனார், மாமியாருக்கும், என் இனிய 2 பிள்ளைகளுக்கும், என்னை இத்தனை ஆண்டுகள் வெளியூரை சேர்ந்தவர் என்று நினைக்காமல் என்னையும் கோவையின் பிள்ளையாக பார்த்து, ஊக்கம் தந்த கோவை மக்களுக்கும் என்றும் நன்றிக்குரியவராக இருப்பேன்.