இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 1400 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் துவக்கம்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவன பங்களிப்புடன் (எல்ரூடி நிறுவனம்) 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் தனியார் பங்களிப்புடன் (கூகுள் நிறுவனம்)  400 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஆகிய இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை இன்று (28.06.2021) வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரவீந்திரன், எல்ரூடி நிறுவன திட்ட மேலாளார் ராஜா சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1000 நபர்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 310 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 1082 படுக்கைகளுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளித்து வரும் பிரத்யேக மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. கோவை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த ஆயிரக்கணக்கானோர், இங்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் பயனாக பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இம்மருத்துவமனைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக இன்று ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவன பங்களிப்புடன் (எல்ரூடி நிறுவனம்) 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் ரூ.70இலட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (கூகுள் நிறுவனம்) 400 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, ஓரே நேரத்தில் சுமார் 280 நபர்களுக்கு ஆக்ஸிஜனுடன் சிகிச்சை அளிக்கமுடியும்.

ஏற்கனவே இம்மருத்துவமனையில் உள்ள 1082 படுக்கைகளில் 783 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், 199 சாதாரண படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 100 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன.

இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களின் மூலம் இம்மருத்துவமனையில் மீதமுள்ள அனைத்து சாதாரணப்படுக்கைகளுக்கு, ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கமுடியும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.