வேலன் காபி கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் கோவையில் உள்ள வேலன் காபி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தொற்று பரவலை தொடர்ந்து கோவை திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில் இன்று முதல் தளர்வுகள் வழங்கி அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த 48 நாட்களாக முடக்கப்பட்டிருந்த பேக்கரி தொழில் இன்று முதல் நடைபெற அரசு அறிவித்தது. ஆனால், காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே கடை திறக்க வேண்டும் என்றும் பார்சல் சேவைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திவான்பகதூர் சாலையில் செயல்பட்டு வரும் வேலன் காபி தேநீர் கடையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கடை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது கடையில் தேநீர் அருந்த வாடிக்கையாளர்களை அனுமதித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை பின்பற்றாமல் இயங்கும் அனைத்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.