சட்டப் பேரவையில் ‘தி கோவை மெயில்’ செய்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் 

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசும் போது, பொருளாதார மேதைகள் தொடங்கி நடுநிலை பத்திரிகைகள் வரை ஆட்சியை பாராட்டி நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கி உள்ளனர் என்று குறிப்பிட்டு பேசினார்.

இதில் இந்த நூற்றுக்கு நூறு என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது ‘தி கோவை மெயில்’ என்பதில் பெருமை கொள்கிறோம். ஏற்கனவே இதை முழுமையாக தி கோவை மெயிலின் பெயரை குறிப்பிட்டு முரசொலி நாளிதழும் செய்தி வெளியிட்டிருந்தது. பொதுவாக அரசியல் கட்சிகள், ஊடகங்கள் நூறு நாள் ஆட்சி, ஓராண்டு கால ஆட்சி என்று செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் முப்பது நாள் ஆட்சி அதாவது முதல் மாதத்தில் என்ன செய்தார் முதல்வர் என்று புதிய கண்ணோட்டத்தில் முதல் முதலில் செய்தியை வெளியிட்டது ‘தி கோவை மெயில்’ தான். இந்த சிறப்பு செய்தியில் பல அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ‘தி ஹிந்து’ ராம்  போன்றவர்களிடம் கருத்து சேகரிப்பு நடத்தி ‘தி கோவை மெயில்’ செய்தி வெளியிட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அண்மையில் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டி இருந்தார். இந்த பாராட்டையும் அங்கீகாரத்தையும் கருத்து கூறிய பெரியோர்களுக்கும், வாசகர்களுக்கும்  சமர்ப்பிக்க விரும்புகிறோம். தனது தந்தையைப் போலவே ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான பத்திரிகைகளுக்கு முதல்வர் அளிக்கும் அங்கீகாரத்துக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.