‘புதிய விஷயங்களைத் தொடர்ந்து கற்க வேண்டும்’

சரியான தருணத்தில், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துபவன், வாழ்வில் உயர்வான நிலையை அடைவதோடு, பிறருக்கு முன்னோடியாகத் திகழ்கிறான். சாதனை படைத்த பல ஜாம்பவான்கள் வெற்றிக்குப் பிறகும் தன் துறை சார்ந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னை மென்மேலும் தயார்படுத்திக்கொண்டு இருப்பார்கள்.

அப்படியாக, ‘ஒவ்வொரு வெற்றியும் இன்னும் கற்றுக்கொள்ள தூண்டுகிறது’ என்று கூறுகிறார் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயரிப்பாளர் சுரேஷ் சந்திரா மேனன். பல துறைகளில் வெற்றிகளை கண்ட இவர், சினிமா துறையில் தனது அனுபவங்களையும், கருத்துகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

சினிமாவில் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது கிடையாது. என் பள்ளிக் காலங்களில் எனக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும். அதில் இருக்கும் யுக்திகளை நானே கற்றுகொண்டு, சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு இருந்தேன். என் பள்ளிக் காலம் முடிந்த பிறகு சென்னையில் உள்ள லாயோலா கல்லூரியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி படிக்க ஆரம்பித்தேன். அப்போது, என் முதல் காதலி கேமராதான். ஆம், நமக்கு இந்த டிகிரி எல்லாம் செட் ஆகாது என்று முடிவு செய்து கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வாகினி ஸ்டூடியோவில் கேமரா உதவியாளராக சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். தினமும் காலை 6 மணிக்கு ஸ்டூடியோவிற்கு சென்று கேமராவை துடைத்து ஷூட்டிங் ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு கேமராவை ரெடி செய்து வைப்பேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்கள் எடுக்கும் கேமராவில் உள்ள விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

திருப்புமுனை என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் வரும். அதை நாம் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு அற்புதமான தருணம் எனக்குக் கிடைத்தது. தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் தயாரித்து ரஜினியின் நடிப்பில் வெளியான பில்லா, தீ, விடுதலை போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதற்கு பிறகு 1982 ம் ஆண்டு கார்த்திக், ஊர்வசி நடித்த “தொடரும் உறவு” என்ற படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த படம் ரிலீஸ் ஆனது. கேமரா மீது அதிகமான ஆர்வம் இருந்த காரணத்தினால் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இதையடுத்து கதை, திரைக்கதை எழுதி, பல முன்னணி நடிகர்களை அணுகினேன். அப்பொழுது அக்கதையை ஏற்று, அதில் நடிக்க யாரும் முன்வரவில்லை. பிறகு, நானே நடித்து விடலாம் என்று முடிவு செய் தேன்.

அந்த படம்தான் “புதிய முகம்”. படம் வெளியாகி விமர்சன ரீதியாக பல பாராட்டுகளைப் பெற்றது. முக்கியமாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசை மிகவும் பேசப்பட்டது. இப்போதுவரை “புதிய முகம்” படப்பாடல் அனைவரையும் கவர்கிறது. ‘ரோஜா’ திரைப்படம் அவருக்கு அமையாமல் இருந்திருந்தாலும் என் படத்துக்கு அவர்தான் இசை அமைப்பாளர். தமிழ் சினிமாவில் ரஹ்மான் வருவதற்கு முன்பு இருந்தே என் விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போதே, நம்ம படத்துக்கு இவர்தான் இசை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.

அஜித், விக்ரம், அரவிந்த்சாமி அந்த காலகட்டத்தில் ‘மாடல்’களாக வலம் வந்தனர். அப்போது என்னுடன் பணியாற்றிய அவர்களின் நட்பு இப்போதுவரை மாறாமல் இருக்கிறது. உழைப்பு, திறமை உள்ளவர்கள் என்றைக்கும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

தற்போது இருக்கும் சினிமாக் களம் வேறு. டெக்னிக்கல் முதற்கொண்டு எல்லாமே மாறிக் கொண்டு இருக்கின்றது. நான் சினிமாவிற்குள் வரும் காலத்தில், ஒரு காட்சி எடுக்கும் முன்பு பயற்சி எடுத்துக் கொண்டு வந்து நடிப்பார்கள். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், எதுவாகினும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துக்குறாங்க. இருப்பினும், காலம் மாறினாலும், மக்களின் ரசனை தெரிந்து படம் இயக்குபவர்களே வெற்றி பெறுகிறார்கள். பெறுவார்கள்.

இளம் சமுதாயம் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்றால், தாங்கள் தேர்ந்தெடுத்த துறை சார்ந்து ஏதாவது ஒன்றை தினமும் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். எல்லாமே எனக்குத் தெரியும் என்ற எண்ணம் வரக்கூடாது. சோலோ படத்தை இயக்கிய பிஜு நம்பியார் மூன்று படங்களை இயக்கிவிட்டார். இருந்தாலும், மணிரத்னம் புதிய படம் செய்யும்போது அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார். இந்த எண்ணம் பலருக்கும் வேண்டும் என்பது எனது கருத்து. 2018ம் ஆண்டு ரொம்பவே எனக்கு ஸ்பெஷல். விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா, 4ஜி, பரத் நடிக்கும் காளிதாஸ் படங்களில் நடித்து வருகிறேன். மறுபடியும் புதிய முகம் படம் எடுக்கத்  திரைக்கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். வெற்றியைத் தேடி ஓடுவதைவிட, உங்கள் திறமையையும் உழைப்பையும் நம்பி செயல்படுங்கள்.

  • பாண்டியராஜ்