தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்த வானதி

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதென புகார் தெரிவித்ததை தொடர்ந்து அதனை உண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.

கோவை காட்டூர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் அலுவலகத்திற்கு சென்ற கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தூய்மை பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அலுவலகத்தில் கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீண்ட நாட்களாக தற்காலிக பணியாளர்களாகவே தாங்கள் பணியாற்றி கொண்டிருப்பதாக தெரிவித்த அவர்கள் தங்களை நிரந்திரம் ஆக்குவதற்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மத்திய அரசு தூய்மை பணியாளர்களுக்கு என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாகவும் உங்களின் விவரங்களை அளித்தால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்கப்படும் உணவை வாங்கி சாப்பிட்ட அவர் தரமான உணவுகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.