பாலியல் கல்வி தான் தீர்வு?

Dr. ஸ்ரீநிதி நித்யானந்த், மனநல மருத்துவர், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை

நாம் அனைவருக்கும் கொரோனா பற்றி தெரியும். வெறும் கொரோனா தான் என்று நினைத்து கொண்டிருந்த நம்மை திடீரென்று உருமாறி உயிரை கொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அதேபோல் கடந்த அரைநூற்றாண்டில் பலவகையான வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். இது நாட்டிற்கும், சமுதாயத்திற்கு நல்ல பலனை தந்துள்ளது. குற்றங்களும் பெருகியுள்ளது. இதிலும் ஆபத்தாக பெண்களுக்கு எதிரான பாலியல் பெருங்குற்றம் நடந்துகொண்டிருந்தாலும் அது குழந்தைகளுக்கு எதிராகவும் பெருகிவருகிறது. இது நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பெரும் தீங்கு. பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு சில ஆண்களுக்கும் ஏற்படுகிறது. அவைகள் பொது வெளியில் தெரிவதில்லை என்பது உண்மை.

இந்த பாலியல் குற்றங்கள் அதிகரிக்க மனநலம் சார்ந்த காரணங்கள் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது என்பதனை பற்றியும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மனநல மருத்துவர் ஸ்ரீநிதி நித்யானந்த் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கமாக பதிலளித்துள்ளார்.

பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் மனநிலை ?

இந்த குற்றத்தில் ஈடுபடுபவன் ஏற்கனவே இதை போன்ற செயலை செய்திருப்பான் அல்லது மது போன்ற போதைக்கு அடிமையானவர்களாக இருக்கலாம். சமூக விரோத ஆளுமை கோளாறு காரணமாக பிறர் மேல் நம்பிக்கை இல்லாது, பிறரை சக உயிராக மதிக்காதது போன்ற குணங்களுடையோர் இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் பெற்றோர் வன்முறையில் ஈடுபடுபவர்களாக இருந்தாலோ அல்லது அவரது நண்பர்கள் வன்முறையில் ஈடுபடுபவராக இருந்தாலோ இவரது குணாதிசியத்தில் மாற்றம் ஏற்படலாம். இதைப் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவோரின் நெருக்கமான ஒருவாராக தான் இருக்கின்றனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்பு?

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒவ்வொரு வகையில் இதனை கையாளுவார்கள். சிலர் தனிமைப்படுத்தி கொள்வது, அமைதியாக இருப்பது, யாரிடமும் அதிகம் பேசாமல் இருப்பது, அதிகப்படியான பயம் போன்றவைகளும், சில குழந்தைகள் இருட்டை கண்டால் அழுவார்கள் போன்ற மன மாறுபாடுகளை கொண்டிருப்பார்கள். வேறு ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தாலும் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை எதிர்காலத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் உள்ள குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமையை இழந்துவிடுவார்கள். இதனை குடும்பத்தினரால் தான் சரி செய்ய முடியும்.

குடும்பத்தினர்கள் இந்த பாதிப்பில் இருந்து மீள முழு உறுதுணையும் அளித்தால் அவர்களால் அதிலிருந்து முழுமையாக வெளியேற முடியும். குடும்பத்தினரும் தவறு இவர் மீது இல்லை என்பதனை முழுமையாக புரிந்து கொண்டு அவர்களுக்கு அன்பும் ஆதரவும் முக்கியமாக அளிக்கவேண்டும்.

பாலியல் கல்வியின் அவசியம் ஏன்?

பாலியல் கல்வி என்பது வெறும் உடலுறவு குறித்த விளக்கமோ விழிப்புணர்வோ மட்டும் இல்லை. அதையும் தாண்டி ஆண், பெண் பேதம் இல்லை என்பதும், இது ஆணாதிக்க காலம் இல்லை என்பதும் உடல் மற்றும் வயது சார்ந்த மாற்றங்கள் குறித்த அறிவை அளிப்பது தான் பாலியல் கல்வி. மேலும் கருத்தரித்தல், கருத்தடை, மாதவிடாய் போன்றவைகள் பற்றிய அறிவும் கிடைக்கும்.

இதனை பெண்கள் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், குடும்பத்தினருக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இது குறித்த புரிதல் இருந்தால், பேச தயக்கம் காட்டாமல் இருந்தால், பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால் அது குறித்து மற்றவர்களிடம் தெளிவு படுத்த உதவியாக இருக்கும்.

முக்கியமாக குடும்பத்தினருக்கு இது குறித்த அறிவும் குழந்தைகளிடம் வெளிப்படை தன்மையும் இருந்தால் மட்டுமே ஒரு சமூகமாக மாற்றங்களை கொண்டுவர முடியும். தனது குடும்பத்தினர் தன்னை ஆதரிப்பார்கள் என்ற நிலை உருவானால் தான் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் அதிகப்படியான தகவல்கள் நம்மை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இதில் எது சரியானது எது தவறான தகவல் என்பதை கண்டறிவது கடினம். அதனால் பாலியல் என்பதை ஒதுக்கப்பட்ட ஒன்றாக பார்க்காமல் அதை பெற்றோரும், ஆசிரியரும் வெளிப்படையாக உரையாடுவதன் மூலம் தான் குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதைபற்றி சொல்வார்கள். இல்லையென்றால் இந்த தவறு நிகழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்.

இதற்கான தீர்வு

குடும்பத்தினருக்கு பாலியல் கல்வி குறித்த அறிவும் விழிப்புணர்வும், செக்ஸ் என்பது ஒதுக்கப்பட்ட, மறைத்து வைக்க வேண்டிய ஒன்றல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் இது குறித்த தெளிவான தகவல்களை பாடமாக கற்பிக்க வேண்டும். பள்ளியும் குடும்பமும் தான் ஒரு நல்ல அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்.

பெற்றோர்கள் ஆண், பெண் பேதமின்றி வளர்க்க தெரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தினரோ, ஆசிரியர்களோ இதை பற்றி சொல்லி கொடுக்கவில்லை என்றாலும் அதற்கான பல பதில்கள் சமூக வலைதளங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் அதனை நாமே தெளிவுப்படுத்திவிட்டால் தவறான தேர்வும், குற்ற எண்ணங்களும் குறையும்.

அதனால் பாலியல் குற்றங்களை குறைக்க பாலியல் கல்வி ஒன்றே தீர்வாக அமையும்.