இரட்டை இலைக்கு இரட்டை தலைமை தானா?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சலசலப்பு எப்போது முடிவுக்கு வரும் என அதிமுக தொண்டர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கட்சியின் அடிமட்ட பொறுப்புகளில் இருந்து கட்சியிலும், ஆட்சியிலும் உயர் பொறுப்புகள் வரை வந்துள்ளனர். ஓ.பி.எஸ், 1989ல் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியின் இரட்டை புறா சின்னத்தின் ஆதரவாளராகவும், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தின் ஆதரவாளராகவும் இருந்தனர்.

1989ல் பெரியகுளத்தில் சாதாரண டீக்கடை நடத்தி வந்த பன்னீர்செல்வம், இப்போது திமுகவில் இருப்பவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கம்பம் செல்வேந்திரனின் ஆதரவாளராக, சட்டமேலவை கலைவதற்கு காரணமாக இருந்த வெண்ணிற ஆடை நிர்மலா ஆதரவாளராக இருந்து, பின்னர் அதிமுக ஒன்றிணைந்தவுடன் ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார்.

தொடர்ந்து, 1996-ல் பெரியகுளம் ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வான பன்னீர்செல்வம், 1998-ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு பக்கபலமாக இருந்ததால், தேனி மாவட்டச் செயலர் பதவி இவரைத் தேடி வந்தது. பின்னர் 2001-ல் பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்முறையாக போட்டி யிட்டு ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

முதல்வர் பதவியை ஜெயலலிதா இருமுறை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானபோது, முதல்வராக பொறுப்பேற்று, பின்னர் அப்பதவியை ஜெயலலிதாவிடம் அப்படியே ஒப்படைத்தார் ஓ.பி.எஸ், ஜெயலலிதா மறைவுக்குப்பின் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றபோது, சசிகலாவுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததன் விளைவை இதுவரை பன்னீர்செல்வம் அனுபவித்து வருகிறார். அடுத்து அமைச்சரவைப் பட்டியலில் கூட இடம்பெற முடியாத சூழலில் தருமயுத்தம் நடத்த வேண்டிய நிலை பன்னீர்செல்வத்துக்கு உருவானது.

பன்னீர்செல்வம் போலவே, எடப்பாடியும், சிலுவம்பாளையம் கிளை செயலர் பொறுப்பில் இருந்தபோது செங்கோட்டையன், சேலம் கண்ணன் ஆகியோரின் ஆதரவாளராக இருந்து 1989-ல் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் இருந்து வெற்றிப்பெற்றவர். 1991-ல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி, 1996-ல் தோல்வி, 1998 மக்களவைத் தேர்தலில் வெற்றி, 1999, 2004 மக்களவைத் தேர்தல்களில் தோல்வி, 2006 பேரவைத் தேர்தலில் தோல்வி, 2011-ல் வெற்றிப்பெற்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவி, 2016 ல் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதவி என ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவராக மாறினார்.

சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானபோது முதல்வராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் 6 மாதங்களில் கட்சியில் இருந்து சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதிகார மையங்களாக மாறினர். இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை இருவரும் தங்கள் வசம் வைத்துக்கொண்டு அதிமுகவில் இருவரும் சரி பாதி என்ற நிலையை உருவாக்கிக்கொண்டனர்.

ஆனால், முதல்வர் பதவி தன்வசம் இருந்ததால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராஜதந்திரமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, படிப்படியாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களையும் தன்வசப்படுத்தி ஆட்சி, கட்சி இரண்டிலும் ஒற்றைத் தலைமையாக நிமிரக்கூடிய அளவுக்கு 90 சதவீத அதிகாரமிக்கவராக உருவெடுத்தார். யார் முதல்வர் வேட்பாளர் என்றபோது பன்னீர்செல்வம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இருப்பினும், நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் மீண்டும் கட்சியை பொருத்தவரை தனக்கும் சரிபாதி அதிகாரம் இருக்கிறது என்பதை நிலைநாட்டும் பணியை பன்னீர்செல்வம் தொடங்கியிருப்பதால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மீண்டும் பனிப்போர் தொடங்கிவிட்டது. இதன் விளைவு தான் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி உருவாகி மீண்டும் பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்தார்.

ஆனால், தனது பெயரில் தனியாக அறிக்கைகளைவிடத் தொடங்கி தான், ‘தான்’ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், கட்சி தனது கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை மேலும் குறைக்கும் வகையில், கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை பற்றி ஆராய வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பதால் அதிமுகவுக்குள் பனிப்போர் மீண்டும் வீரியமாகியுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக நிமிரக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஓர் ஆயுதமாக பயன்படுத்தவும் பன்னீர்செல்வம் தொடங்கியிருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த பேரவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு 33 சதவீத வாக்குகளும் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத்ததால் சசிகலாவின் தேவை அதிமுகவுக்கு இப்போது இல்லாத சூழ்நிலையே தொடர்கிறது. எனவே, பன்னீர்செல்வத்தின் சசிகலா ஆதரவு குரல் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

கொங்கு மண்டலத்தில் 64 தொகுதிகளில் 42 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக உள்ளது. ஆனால், டெல்டாவில் 35 தொகுதிகளில் 4 தொகுதிகளிலும், தென்மாவட்டங்களில் 54 தொகுதிகளில் 15 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றிப்பெற்றது பன்னீர்செல்வத்தின் முக்கியத்துவத்தை சற்று குறைத்துவிட்டதாக தெரிகிறது.

ஆனால், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் தான் சீர்மரபினர் வாக்குகளால் தென்மாவட்டங்கள், டெல்டாவிலும், தலித் வாக்குகளால் வடதமிழகத்திலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். எடப்பாடி தொகுதியில் 60 சதவீத வன்னியர்கள் இருப்பதால் ஒரு தொகுதியை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி நகர்த்திய அரசியல் கணக்கு, 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவை பாதித்துவிட்டது என்பது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கலக குரல்.

எனவே, பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று பன்னீர்செல்வம் நேரடியாகவே குரல் கொடுத்து வருகிறார். ஆனால், சீர்மரபினர் வாக்குகள் அதிமுகவுக்கு விழுந்ததால் தான் மேலூர், உசிலம்பட்டி, அம்பாசமுத்திரம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றிப்பெற்றுள்ளது. வடதமிழகத்தில் தலித் வாக்குகள் வரவில்லை என்பது உண்மைதான். ஆனாலும், அதிமுக அதிக வாக்குகள் பெற்றுதான் தோல்வி அடைந்தது. எனவே, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் குரல்களில் நியாயம் இல்லை என்கின்றனர் இ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

தோல்வி குறித்து ஆராய்ந்து மாவட்டச் செயலர்களை மாற்றினால் தனது விசுவாசிகளை அதில் அமர வைக்க முடியும் என காய்நகர்த்துகிறார் ஓ.பி.எஸ். மேலும், எதிர்கட்சித் துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா ஆகிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமியே தேர்வுசெய்யட்டும். அப்படி தேர்வு செய்யும்போது பதவி கிடைக்காத கொங்கு மண்டலம் அல்லாத எம்.எல்.ஏ.க்கள் 27 பேரை தனது ஆதரவாளர்களாக மாற்றலாம் என்பதும் ஓபிஎஸ் கணக்கு.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரது பனிப்போரால் அதிமுக தொண்டர்கள் மனம்வெதும்பி உள்ளனர். இருப்பினும், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை. இரட்டை இலையில் கையெழுத்திடும் அதிகாரம் இருவரிடமும் இருப்பதால் இருவர் மனங்களையும் சந்தோஷப்படுத்தி அடுத்து உள்ளாட்சித் தேர்தல் அல்லது கட்சிப் பதவிகளை எப்படி பெறலாம் என்ற கணக்குடன் இரண்டாம் கட்டத் தலைவர்கள் செயல்படத் தொடங்கிவிட்டனர்.

எனவே, 2024 மக்களவைத் தேர்தல் வரை ஓபிஎஸ், இபிஎஸ் இடையே தொடர்ந்து பனிப்போர் இருக்கும். ஆனால், முடிவு வராது. இருப்பினும் 2026 பேரவைத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும்போது தான் இந்த பனிப்போர் முடிவுக்கு வரக்கூடும். இரட்டை இலை இருக்கும் வரை இரட்டைத் தலைமை தொடரும். பனிப்போர் முடிவுக்கு வரும்போது, இரட்டைத் தலைமை இரு தனித் தனி தலைமைகளாக மாறி இரட்டை இலை காணாமல் போகவும் வாய்ப்பு ஏற்படலாம் என்பது தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.

இரட்டைத் தலைமை தவிர்க்க முடியாதது!

இது குறித்து அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அரசியலில் தேர்ந்த, முதிர்ந்த தலைவர்கள். ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் கற்ற யாரும் ஜெயலலிதா போல கொட்டிக் கவிழ்க்கமாட்டார்கள். இருவரும் தெளிவாக அரசியல் அரங்கில் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொண்டு கூடுதல் அதிகாரத்தை எப்படி பெறுவது என்பதற்காகவே செயல்படுவார்கள்.  எந்த சூழ்நிலையிலும், வீம்பு, வீராப்பு காட்டி இருக்கும் அதிகாரத்தை இழந்துவிடமாட்டார்கள்.   இரட்டைத் தலைமையாக இருக்கும் வரை தான் இருவருக்குமே அரசியல் அரங்கில் மதிப்பு. ஒருபோதும், தங்களது அதிகாரத்தை தங்களுக்குள் ஒருவரிடமோ அல்லது வேறொருவரிடமோ விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எத்தனை பனிப்போர் வந்தாலும் இரட்டைத் தலைமை தொடரும் என்றார்.