கே.ஐ.டி கல்லூரியில் இணையவழி கருத்தரங்கு

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றம் (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் கோவையில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து 3.6.2021 வியாழக்கிமையன்று “மல்டி-டிசிப்ளினரி & இன்டெர்டிசிப்ளினரி அப்ரோச் டூ இன்னோவேடிவ் அகடாமிக் ப்ராஜெக்ட் ஐடியாஸ் & ஆபர்ச்சுனடி பஃர் என்ஜினியரிங் க்ராடுவேட்ஸ்” (MULTI-DISCIPLINARY & INTERDISCIPLINARY APPROACH TO INNOVATIVE ACADEMIC PROJECT IDEAS &  OPPORTUNITIES FOR ENGINEERING GRADUATES) என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடத்தியது.

இதில் என்.டி.ஆர்.எஃப் (NDRF) தலைவர் மற்றும் டி.என்.எஸ்.சி.எஸ்.டி (TNSCST) துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, என்.டி.ஆர்.எஃப் (NDRF) முன்னாள் இயக்குனர், எரிவாயு விசையாழி ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் (Gas Turbine Research Establishment) முன்னாள் இயக்குனர் கே.ராமச்சந்திரா, என்.டி.ஆர்.எஃப் (NDRF) இயக்குனர் தில்லிபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் உரையாற்றிய போது புதிய தலைமுறையினருக்கு கொரோனாவை எதிர்கொள்ளும் வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொற்றுநோய்களின் போது இளம் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், அதிக தடுப்பூசிகளை தயாரித்தல், கொரோனா சோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல்  போன்ற பல்வேறு பணிகளில் உதவுகின்றனர். எதிர்கால வளர்ச்சியை நோக்கி மாணவர்களை ஊக்குவித்ததுடன், தொழில்களில்  திறமையான மனித சக்தியைத் தேடுவதால் மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவில் வலுவாக இருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார். இளம் பொறியாளர்கள் கற்றலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும், மேலும் புதிய திட்டத்தை வகுப்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

கே.ராமசந்திரா பேசுகையில், வேளாண் பொறியியல், பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றி எடுத்துக் கூறினார். தில்லிபாபு பேசுகையில், தொழில்துறை தேவைகளை எதிர்பார்ப்பதை நோக்கி ஒரு அறிவார்ந்த உரையை நிகழ்த்தினார். மாணவர்களில்  முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிப்பின் போது சில புதிய அறிவியல்  கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என்று  அவர் ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி.கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெபினாரில் பங்கேற்றனர்.