தண்ணீர் வராத ஓடையில் நடமாடும் யானைகள்

கோவை மாவட்டம் மத்துவராயபுரம் அருகில் உள்ள வளையன்குட்டை எனும் பகுதியில் நீர்வரத்து இல்லாமல் வற்றி காணப்பட்ட ஓடையில் 5 காட்டு யானைகள் உலா வந்துள்ளன.

மழை பொழிவின் போது மலையில் இருந்து வரும் மழை நீரானது அந்த ஓடை வழியாக ஆற்றில் சேரும். ஓடை அருகில் குடியிருப்புகளும் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பொழிவு இல்லாததால் அவ்வோடையில் நீர்வரத்து குறைந்து ஓடையானது வற்றிய நிலையில் இருந்துள்ளது. இன்று காலை அந்த ஓடையின் வழியாக 5 காட்டு யானைகள் உலா வந்துள்ளன இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.ஓடையின் அருகிலேயே மக்கள் வசிப்பதால் இதுபோன்ற யானைகள் அவ்வழியாக நடமாடுவது அப்பகுதியில் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.