காற்றில் வேகமாக பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வகைகள் கண்டறியப்பட்டன. ஆனால் வியட்நாமில் இதுவரை கண்டறியப்படாத காற்றில் வேகமாக பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவே வியட்நாமில், 7 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள காற்றில் பரவும் உருமாறிய கொரோனா குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில்: இந்தியா மற்றும் பிரிட்டன் வகை கொரோனா வைரஸின் ஹைபிரிட் வகை தான் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் என கூறினார்.

மேலும் இதன் மரபணு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது அது பிற கொரோனா வைரஸின் வகைகளைக் காட்டிலும் இதன் பரவும் வேகம் அதிகமாக இருப்பதாகவும், நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள், புதிய வகை திரிபுவால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காற்றில் பரவக்கூடிய புது வகை உருமாறிய கொரோனா வைரஸின் மரபணு தரவுகளை விரைவில் அரசு வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.