கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கோவையில் கடந்த 10 நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 4,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகளவில் தொற்று ஏற்படும் நிலையில், புதிய உச்சமாக நேற்று 4 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 164-ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 2,528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 791-ஆக உள்ளது.

தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 33 ஆயிரத்து 325 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப்பெறும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 3,816 உள்ள நிலையில், 79 படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும், சாதாரண படுக்கைகள் 437, ஐசியு படுக்கை 9 என மாவட்டத்தில் மொத்தம் 525 படுக்கைகள் காலியாக உள்ளது.

மேலும், கோவையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்ததில்,  இறப்பு எண்ணிக்கை 1,048-ஆக உயர்ந்தது.