கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

கேரளாவில் இன்றிலிருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவல் என்பது மிகக்கடுமையாக உள்ள நிலையில் அந்தத மாநில முதல்வர்கள் ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.

கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து வருவதன் காரணத்தால் கேரளாவில் இன்றிலிருந்து 14நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யபட்டதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி முழு சோதனைக்கு பின்னரே கேரளா செல்ல அனுமதிக்கின்றனர் கேரள காவல்துறையினர்.

இதில் தமிழக கேரள எல்லையான கோவை மாவட்டம் வாளையாறு பகுதியில் கேரள காவல்துறையினர் கேரளாவிற்கு செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை மற்றும் ஆவணம் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் கேரள செல்ல ஈ – பாஸ் பெற்று இருக்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால், பெட்ரோலியம், கொண்டு செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப் படுகிறது. அனுமதி இல்லாமல் கோவையிலிருந்து கேரளா செல்வோரை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர் அவர்களை ஊரடங்கு காரணம் காட்டி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாளையாறு காவல் நிலைய ஆய்வாளர் கூறும்போது: கோவையிலிருந்து பாலக்காடு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அனுமதி இல்லாமல் வருவோரை திருப்பி அனுப்புவதாகவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடுவதாக தெரிவித்தார்