பறவைகளுக்கு தண்ணீர், தானியம் – பள்ளி மாணவர்கள் முயற்சி

கோவையில் சாலையோர மரங்களில் பறவைகளுக்காக தானியம் மற்றும் தண்ணீர் வைத்து   மண்பாணையை கட்டி உதவும் ஆஸ்ரமம் பள்ளி மாணவர்கள்.

கோடைகாலம் துவங்கி விட்டதால் வனத்தில் வாழும் விலங்குகள் மட்டுமின்றி நகரங்களில் சுற்றிதிரியும் பறவைகளும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன.

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சாய் சேவா சேரிட்டபிள் டிரஸ்ட் தேசிய மனித உரிமைகள் ஆணையம்  இணைந்து பறவைகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  பள்ளி வளாகத்தில் நடத்தியது.

இதில்  டிரஸ்டின் நிர்வாகிகள் ஸ்ரீநாகராஜ், ரமேஷ் மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி  மாணவ,மாணவிகளிடம் இயற்கை வளம் மற்றும் பறவைகளை  பாதுகாப்பது குறித்து கலந்துரையாடினர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில், தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வந்த, தேங்காய் ஓடு, சிறிய அளவிலான மண்பானை, சிறிய பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றை, பறவைகளுக்கு உணவு வழங்கவும், தண்ணீர் குடிக்கவும் ஏற்ற வகையில்  பள்ளி வளாகம் மற்றும் சாலையோரங்களில்   உள்ள மரங்களில் கட்டி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தினமும் தண்ணீர் மற்றும் தானியங்களை பறவைகளுக்கு  போட உள்ளதாகவும் மாணவ,மாணவிகள் கூறியுள்ளனர். கோடைகாலத்தில் பறவைகளின் நலன் கருதி மாணவ,மாணவிகள் செய்த இந்த முயற்சியை இயற்கை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.