மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் – மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் 

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று (16.03.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப்பணிகளையும், மழைநீர் வடிகால் கால்வாய்களில் நீர்செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்புகள்  அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளையும், கொசு மருந்து தெளிக்கும் பணிகளையும்  மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார்.

மேலும் அப்பகுதி மக்களிடம் சாலையோரங்களிலும், மழைநீர் வடிகால் கால்வாய்களிலும் குப்பைகளைக் கொட்டக்கூடாது எனவும், மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுவர்களில் நோட்டீஸ், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்களை ஓட்டவோ, சுவர்களில் எழுதவோ தடைசெய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்   குமாரவேல் பாண்டியன்   தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகரப்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.