தேர்தல் விதிகள்: துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை  

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தனிப்பட்ட முறையில்  துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (6.03.2021) தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், கோவை மாவட்டம் புறநகர் பகுதியில்  உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள்  தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற  பாதுகாப்பு கிடங்கிலோ தவறாது இருப்பு வைக்குமாறு அறிவித்துள்ளார்.

துப்பாக்கி உரியதாரர்கள் அனைவரும் துப்பாக்கிகளை இருப்பு வைத்துவிட்டார்களா? என்பதை உறுதிப்படுத்துமாறு காவல் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில காவல் பணியில் உள்ளவர்கள் மற்றும்  வங்கித்துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கு மட்டும்   இத்தடை உத்தரவிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.