மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு உருவப்படம் திறப்பு விழா

தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் குறித்து குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்து கொள்ள பாடத்திட்டத்தில் அவற்றை இணைக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சி கல்வீரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. ஓவியர் பருதிஞானம் என்பவரது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தை ஆன்மீக மடாதிபதிகளான, பிரேசில் ஆத்மநம்பி சுவாமிகள், உஜ்ஜயினி ஜுன்னா அகாதா மடாதிபதி பிரியாவ்ரத்பூரி சுவாமிகள், போகர் பழனி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி மடாதிபதி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிகள் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிகள், புகழ்பெற்ற மருதமலை பாம்பாட்டி சித்தரின் உருவப்படம் திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் சித்தர்கள் மற்றும் ஆழ்வாழ்வார்கள் இயற்றிய பல நூல்கள் பழைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் தற்போது அவை பாடத்திட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். சித்தர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆன்மீகத்தை பற்றி குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாடத்திட்டங்களில் ஆன்மீகம் குறித்த பாடங்களை சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் எந்த மதத்தவர் ஆனாலும் பிற மதத்தவரை இழிவு படுத்துதல் என்பது தேவையற்ற செயல் எனவும் அதுபோன்ற செயல்கள ஈடுபடுவோர் மீது அரசு எவ்வித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.