காடர் புத்தக வெளியீட்டு விழா

நகரத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் மலைவாழ் மக்களை வேற்று கிரகவாசிகள் போல் பார்ப்பதாக காடர் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் பேசியுள்ளார்.

கோவை: கோவையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் எழுதிய ‘காடர்’ என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. ‘காடர்’ என்ற 10 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு காடு சார்ந்த பழங்குடியின மக்களின் துயரங்களையும், காடும் காடு சார்ந்த உயிரினங்களின் வாழ்வியலையும் பறைசாற்றும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் செயலாளர் தங்கராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவானது பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘காடர்’ சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்.

அதனைதொடர்ந்து அவர் பேசியதாவது: கோவை எனக்கு புதிய ஊரல்ல. கோவை என்பது எனக்கான அடையாளம். இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுள் நாமும் ஒருவர். நம்மை போலவே நம்மை சார்ந்தும், சாராமலும் பல உயிரினங்கள் உள்ளன. ஆனால், சிந்தனையிலும், செயல்பாட்டிலும், மொழியை உருவாக்குவதிலும்தான் நாம் மற்ற உயிரிகளிடம் இருந்து வேறுபடுகிறோம். ‘காடர்’ புத்தகம் காடு குறித்த முழுமையாக புரிந்து கொண்டு எழுதப்பட்ட புத்தகமாக பார்க்கிறேன். இந்த புத்தகத்தின் எழுத்தாளர் ஒரு செய்தியாளராக மட்டும் அல்லாமல் தனது அனுபவங்களை கிரகிப்பவராக உள்ளார். இது ஒரு வாழ்க்கைபதிவாக உள்ளது.

முதலில் யானையைப் பார்த்து மிரண்டு நிற்கும் மனிதர் கூட்டம் என்று துவங்கும் கதை, இறுதியில் முகாமிற்கு காலில் சங்கிலியுடன் செல்வது போன்று முடிவுறுகிறது. காடு தான் இயற்கையின் ஆதி அடையாளமாக உள்ளது. ஆனால் கடந்த 200 ஆண்டுகளாக காடு ஒரு வேட்டை பொருளாக, பணப் பொருளாக மாற்றியுள்ளனர் மனிதர்கள். சங்க இலக்கியங்களில் காடுகளில்தான் மனித வாழ்க்கை தொடங்கியதாகவே பதியப்பட்டுள்ளது. 5 வகை நிலப்பரப்புகளில் முதன்மையாக காடுகளை தான் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். தேயிலை பயிரிடுவதிலேயே காடுகளை பணமாக பார்க்கும் போக்கு தொடங்கியது.

பிரிட்டிஷ் காலத்திற்கு பிறகு துப்பாக்கி பயன்பாடு ஜமீன்களுக்கு வந்தது. அதன் வெளிப்பாடகவே மிருகங்களை கொன்று அதனை வீடுகளில் மாட்டி வைத்தனர். பின்னர், மலைகளில் இருந்து கனிம வளங்களை எடுக்க ஆரம்பித்தனர். அது முதல் தொடர்ச்சியாக 200 வருடங்கள் மலைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ‘காடர்’ பழங்குடியின மக்களின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக பார்க்கிறேன். இந்த 10 கதைகளில், தங்கம் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்து கதை உள்ளது. எழுத்து வடிவத்தில் படிக்கும் போது நானே தங்கம் எடுக்கும் குகைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. இயற்கையை நேசிக்காத அரசும், ஆளுமையும் மிகவும் மோசமானது. நகரத்தில் உள்ள மக்கள் மலைவாழ் மக்களை வேற்று கிரக வாசிகளாகத்தான் பார்க்கிறோம். மனிதாபிமானம் இல்லாத பார்வையால் மலைவாழ் மக்கள் சிதைக்கப்படுவதை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. எழுத்தாளர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள். இவ்வாறு பொன்வண்ணன் கூறினார்.