பர்ஸ்ட் ஹார்ட் சார்பில் சமூக அக்கறை சேவகர்களுக்கான விருது

கோவையில் திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து இலவச பயிற்சிகள் வழங்கி வரும் பர்ஸ்ட் ஹார்ட் குழுவினர், முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, சமூக அக்கறையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.
கோவை : தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது மாரடைப்பினால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பரவலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்வது என்பது பற்றிய முதலுதவி பயிற்சியை இலவசமாக அளித்து வருகின்றனர். கோவையை சேர்ந்த பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் நெட்ஒர்க் (FIRST HEART FOUNDATIONS NETWORK) எனும் தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் அவரது குழுவினர் கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறந்த சமூக அக்கறை சேவகர்களுக்கான விருது வழங்கும் விழா கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் செந்தில் குமார் மற்றும் கோவை மத்தியம் குற்றபிரிவு உதவி ஆணையர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து விழாவில் டாக்டர் சரவணன், திடீரென பொது இடங்களில் ஒருவருக்கு மாரடைப்பு சூழலில் உயிர் காப்பதற்கு உடனடியாக அளிக்கப்படக்கூடிய `சி.பி.ஆர்’ (Cardiopulmonary resuscitation) எனப்படும் முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என செய்து காண்பித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மட்டுமின்றி தமிழகத்தின் எந்த பகுதியாக இருந்தாலும் பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முதலுதவி பயிற்சியை இலவசமாக அளிப்பதாக கூறிய அவர், கடந்த கொரோனா காலங்களில் கூட ஆன்லைன் வழியாக முதலுதவி பயிற்சிகளை அளித்ததாக தெரிவித்தார்.