கோவையில் 30 இடங்களில் அம்மா மினி கிளினிக் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவையில் 30 இடங்களில் அம்மா மினி கிளிக் துவங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக 2 கிளினிக்குகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 2000 ‘முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்’ துவங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 14ம் தேதி இத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

முதற் கட்டமாக தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட  மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 மினி கிளினிக்குகளும், புறநகர் பகுதிகளில் 27 மினி கிளினிக்குகள் என  மாவட்டத்தில் மொத்தம் 30 கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒண்டிப்புதூரை அடுத்த நெசவாளர் காலனியிலும், சிவானந்தா காலனியிலும் மினி கிளினிக்குகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று(17.12.2020) ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டத்தை முதலமைச்சர் கொடுத்துள்ளார். 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு கொடுத்துள்ளோம். வாக்களித்த மக்களுக்கு நன்றியுடன் பணியாற்றுகிறோம்.

இவையனைத்தும் யாருமே எதிர்பாராத திட்டங்கள். கோவையில் அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு விபத்துகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் திட்டமும் விரைவில் துவங்கும். குறுகிய காலத்தில் கோவைக்கு 5 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் மனசாட்சிப்படி வேலை செய்கிறோம்.

இந்த மினி கிளினிக் மூலம் நடுத்தர ஏழை மக்கள் பயனடைவார்கள். கோவையில் 70 கிளினிக்குகள் அமைய உள்ளது. அதில் 30 கிளினிக்குகள் முதற்கட்டமாக செயல்பட உள்ளது.

இந்த கிளினிக்குகள் மாலை 8 மணிவரை செயல்படும். பல்வேறு நோய்களுக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும். இதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கியுள்ளோம், சத்துமாத்திரைகள் வழங்கியுள்ளோம். இப்படி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறோம். இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனைத்து திட்டங்களையும் செய்து கொண்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.