கோவையில் 15 வயது கரடி உயிரிழப்பு..!

கோவை மதுக்கரையை அடுத்த மங்கலபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கரடி ஒன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சுருண்டு கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுக்கரை வனச்சரகருக்கு அளித்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் கரடியின் உடல் நலத்தை பரிசோதித்தனர்.

அப்போது கரடியின் உடலின் முதுகுப் பகுதியில் சில காயங்கள் இருப்பதும் அதில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால் அந்த கரடி நடக்க முடியாமல் படுத்திருந்ததை வனத்துறையினர் அறிந்தனர். இதனை தொடர்ந்து அந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை கூண்டில் வைத்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (24.10.2020) அதிகாலை கரடி உயிரிழந்துள்ளது.