34 பயனாளிகளுக்கு ரூ.1.02கோடி மதிப்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை வழங்கிய அமைச்சர்

கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மாவுதம்பதி ஊராட்சியில் இன்று (23.10.2020) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து,  34 பயனாளிகளுக்கு ரூ.1.02கோடி மதிப்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

பின்னர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவிக்கையில், அம்மா ஜெயலலிதா அவர்களின் எண்ணமான எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோவை மாவட்டத்தின்; அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி ஆறுமுககவுண்டனூரில் ரூ.139.27 இலட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விஸ்தாரிப்பு, 1இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டி மற்றம் வீடுகளுக்கு பதிய குடிநீர் குழாயர் இணைப்பு வழங்கும் பணி, மாவுத்தம்பதி ஊராட்சியில், ரூ.1.49கோடி மதிப்பில் கான்கீரிட் சாலைகள், தார்சாலைகள், தடுப்பணைகள், அங்கன்வாடி, பள்ளிகட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

மேலும், 34 பயனாளிகளுக்கு தலா ரூ.3இலட்சம் என மொத்தம் ரூ.1.02 கோடி மதிப்பில் பசுமைவீடுகள் கட்டுவதற்கு ஆணையும், 6 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.