‘பள்ளிகள் எப்போது திறக்கப்படும்’?… ‘பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா’?… அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு துறைகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் தேதியை நிர்ணயிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியது உள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், பொதுத்தேர்வு தேதியை நிர்ணயித்தல், 40 சதவீத பாடக்குறைப்பு, பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்தல், 2-ம் பருவ புத்தகம் வழங்குதல், ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் களை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய செங்கோட்டையன், ”பள்ளிகளை திறப்பதற்கு தற்போது சாத்தியமில்லை. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்ட பிறகு முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பது பற்றி முதல்- அமைச்சர்தான் அறிவிப்பார். ‘நீட்’ தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை வரும் டிசம்பரில் தொடங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பாடத்திட்டங்களை குறைப் பதற்கான ‘புளு பிரிண்ட்’ ஐ மாணவர்களுக்கு அளிப்பது தொடர்பாக முதல்- அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.” என தெரிவித்தார்.

 

 

 

 

Source : Behindwoods