அறம் சேவா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு இலவச உணவு பொருட்கள்

கோவை அறம் சேவா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

செல்வபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அறம் சேவா அறக்கட்டளை சார்பாக ஏழை குடும்ப மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை, இலவச நோட்டு புத்தகங்கள், வழங்குவது, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து  செய்து வருகிறது. இந்நிலையில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா அறம் சேவா அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

அறக்கட்டளையின் தலைவர் அயூப் அலி, தலைமையில் நடைபெற்ற இதில் பொருளாளர் அபுதாகீர் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மிஸ்டர் குழும நிறுவனங்களின் தலைவர் இக்னீசியஸ் பிரபு, மனிதநேயம் பவுண்டேஷன் சுலைமான், பால்ராசு, ஹாஜி இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளியம்மாள் சேவா டிரஸ்டின் நிறுவனர் வள்ளியம்மாள் ஏழை குடும்ப பெண்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனா கால ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு இது போன்று மனிதநேயத்தோடு உதவிகளை செய்வது மிகவும் பாராட்டுக்குரிய செயல் என தெரிவித்தார்.

விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் இஸ்மாயில், சிவக்குமார், செல்வராணி, திலகராஜ், மோகன்ராஜ், பாலகிருஷ்ணன், அ.தி.மு.க.வின் செல்வபுரம் பகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் செயலாளர் சரண்யா நன்றி கூறினார்.