ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சையால் தொற்றிலிருந்து குணமடைந்த 8 மாத கர்ப்பிணி

கொரோனாவால் 80 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ப்பிணிப் பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ரத்தினபுரியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தை இல்லாத சூழலில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு செயற்கை முறையில் தற்போது கருத்தரித்துள்ளார்.

தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கர்ப்பிணி மிகுந்த வேதனைக்குள்ளாகினார். மேலும், சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளை அணுகியும் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில், கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் 80 சதவீதம் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளது என்பதையும் இதனால் அவரது நுரையீரலின் வேலை செய்யும் திறன் வெகுவாக குறைந்திருந்தது என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்த சூழ்நிலையில் அவர்களுடைய நீண்ட ஆசையான குழந்தையை பெறுவதில் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற மருத்துவர்கள்  குழு அமைக்கப்பட்டு அதற்கு அவர்கள் பொது மருத்துவத் துறை நிபுணர் ரவிக்குமார் தலைமையிலும் மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் கனகராஜ் மற்றும் சண்முகவேல்

தலைமையிலும் மற்றும் மகப்பேறு துறை தலைமை மருத்துவர் கீதா ஆகியோர்கள் அந்த நோயாளியை  தீவிரமாக கவனித்து வந்தனர். அந்த நோயாளிக்கு ஹைஃப்லோ ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு படிப்படியாக அந்த ஆக்ஸிஜன் அளவு குறைக்கப்பட்டது.

மேலும், அவருக்கு கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேகமான சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த அதிதீவிர கண்காணிப்பு மூலம் கர்ப்பிணி பூரண  நலமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

இந்த அதிதீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களை மருத்துவ மனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.