குடிமை பணிக்கான முதனிலைத் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமை பணிக்கான முதனிலைத் தேர்வு 04.10.2020  ஞாயிறு அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. 8685 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்க துணை ஆட்சியர் தலைமையில் ஏழு கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழு ஒவ்வொன்றும் மூன்று தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியினை மேற்கொள்ளும்.

மேலும் ஒவ்வொரு மையத்திற்கு ஒரு ஆய்வு அலுவலர்கள் வீதம் 21 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 56 உதவி மேற் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்வு அறையில் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள 763 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தேர்வு மையம் சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களை மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போதுமான தளவாடங்கள், வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மின்சார வசதஹிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக்கவசங்கள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.