சின்ன வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு

தமிழ்நாட்டில், சின்ன வெங்காயம் கடந்த மூன்று ஆண்டுகளாக 32,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 3,01,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு ஆண்டிற்கு ஏழு லட்சம் டன் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இருப்பினும் மூன்று டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

வர்த்தக மூலங்களின் படி, சின்ன வெங்காயம் மூன்று முக்கிய பருவங்களான வைகாசி, புரட்டாசி மற்றும் தைப்பட்டம் ஆகிய பருவங்களில் பயிரிடப்பட்டு சேமிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கிறது.

தற்பொழுது புரட்டாசிப்பட்டம் தொடங்கியுள்ள நிலையில் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்தானது பெரம்பலூர், துறையூர், தாராபுரம், மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவும் கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் கொல்லிகள் ஆகிய பகுதிகளிலிருந்து குறைந்த அளவும் வருகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வரும் விழா காலங்களில் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரிப்பதால் விலை உயர வாய்ப்புள்ளது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையையும் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் `அடிப்படியில், அறுவடையின்போது தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு 38 முதல் 40 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் வரத்தைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.