கட்டட விபத்து : நிவாரணத் தொகையை வழங்கி அமைச்சர் ஆறுதல்!

செட்டிவீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணத் தொகையை வழங்கினார்.

கோவை செட்டி வீதி அருகே கனமழையால் 3 மாடி வீடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சமும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.12 லட்சத்தை நிவாரணமாக வழங்கினார். மேலும், காயமடைந்த மூவருக்கு தலா ரூ.1.5 லட்சத்தை குடும்பத்தினரிடம் வழங்கினார்.

மேலும், உயிரிழந்த மணிகண்டன் என்பவரின் வாரிசுதாரர் யார் என்பதை விசாரித்த பிறகு அவரது குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.