கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் வ.உ.சிதம்பரனார்.

அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு செக்கு இழுத்தார். அவர் மறைவுக்கு பிறகு அந்த செக்கு கோவை மத்திய சிறையில் நினைவு மண்டபமாக அமைக்கப்பட்டது. இதற்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஆண்டுதோறும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.  இன்று (5.9.2020) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 -வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவர் இழுத்த செக்கிற்கும், அவரது உருவப்படத்திற்கும், உருவ சிலைக்கும் பல்வேறு தரப்பினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வ.உ.சிதம்பரனாரின் பற்றாளர்கள் சிதம்பரனாரின் புகழ் பொதுமக்கள் மத்தியில் எளிதாக சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.