சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50% விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.

சாதிச்சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.