கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்

கோவை மாவட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில்  மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மருத்துவர் காளிதாசு ,இணை இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நிகழ்வுகளில் போதுமான படுக்கை வசதி, தீவிர சிகிச்சை படுக்கை வசதி மருத்துவர்கள் மற்றம் மருத்துவப்பணியாளர்கள் இல்லை எனவும் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிப்பதால் தாமதம் ஏற்படுவதாகவும் சில நேரங்களில் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை எனவும் புகார்கள் வரப்பெறுகின்றன. அதேபோல சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் வரப்பெறுகிறது.

அதன்படி கோவில்பாளையத்திலுள்ள குமரன் மருத்துவமனை, கே.எம்.சி.எச் மருத்துவமனை, முத்தூஸ் மருத்துவமனை, அன்னூர் எஸ்.எம்.எப் மருத்துவமனை, மற்றும் சரவணம்பட்டி கே.ஜி.மருத்துவமனைகளுக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர்  சுரேஷ் அவர்களை (8220655666) ஒருங்கிணைப்பு அலுவலராகவும்,  மலுமிச்சம்பட்டி கற்பகம் மருத்துவமனை, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனை, கோவை அபி ஆனந்த் மருத்துவமனை மற்றும் காந்திபுரம் ராயல்கேர் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன் அவர்களை (9952648475) ஒருங்கிணைப்பு அலுவலராகவும், பீளமேடு பி.எஸ்.ஜி.மருத்துவமனை, நீலாம்பூர் ராயல்கேர் மருத்துவமனை, மற்றும் காளப்பட்டி கே.எம்.சி.எச் மருத்துவமனைகளுக்கு கோவை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்  துரைசாமி அவர்களை (6382793328) ஒருங்கிணைப்பு அலுவலராகவும், ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை, பாப்பநாயக்கன்பாளையம் ஜி.கே.என்.எம் மருத்துவமனை, காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு கே.ஜி.மருத்துவமனை, சென்னை மருத்துவமனை, மற்றும் இந்துஸ்தான் மருத்துவமனைகளுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) முருகன் அவர்களை (9487132112) ஒருங்கிணைப்பு அலுவலராகவும், துடியலூர் லட்சுமி மருத்துவமனை, சாய்பாபா காலனியிலுள்ள ஒன்கேர் மருத்துவமனை மற்றும் கங்கா மருத்துவமனைகளுக்கு உதவி இயக்குநர் (நில அளவை பதிவேடுகள் துறை) பதவமணி அவர்களை (9944483131) ஒருங்கிணைப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், மருத்துவ வசதிகள் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை கொண்டு குறையின்றி சிகிச்சை கிடைப்பதை கண்காணித்திட  வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில்  அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும்.

மேலும் நோயாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பது கண்காணிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று பரவலாக உள்ள நிலையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் மற்றும் சிகிச்சை விவரம், குறித்து தினந்தோறும் அறிக்கை சமர்பிக்கப்பட கண்காணிப்பு அலுவலர்களால் உறுதி செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.