தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து (10) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் இணையதளவாயிலாக இன்று துவக்கிவைத்தார்.

இளங்கலை பாடப்பிரிவுகளான, இளமறிவியல் (மேதமை) வேளாண்மை, இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை, இளமறிவியல் (மேதமை) வனவியல், இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்), இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பம் (உணவு தொழில் நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல்) மற்றும் இளமறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டது.

இதற்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்திற்கு தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். மேலும் மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை www.tnau.ac.in இணையதளத்தில்  அறிந்துகொள்ளாம்.

மாணவர்களின் வசதிக்காக பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பிற்கான தகவல் கையேடு இந்த ஆண்டு முதல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும்  தகவல்கள் தெரிந்து கொள்ள 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவிச் சேவை எண்களை அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு கொண்டும், இணைய தளவாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 17 கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தரவரிசைப்பட்டியல் செப்டம்பர் 29 அன்று வெளியிடப்படும் என்று வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.