உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு மேற்கொண்ட போது முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது

கொரோனா ஊரடங்கால் உக்கடம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில், உதவி ஆணையர் மகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். தினமும் மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.