கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது.

கோவை, அம்பேத்கர் நகரில் 65 வயது மூதாட்டி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (4.8.2020) சிகிச்சைப் பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

இதுதவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உக்கடம் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, சலீவன் வீதியைச் சேர்ந்த 82 வயது முதியவர், வரதராஜபுரத்தை சேர்ந்த 39 வயது ஆண், முத்துசாமி காலனியை சேர்ந்த 46 வயது பெண், செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய 5 பேரும் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

கோவையில் இன்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததைத் தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 28 பெண்கள், 73 ஆண்கள் சேர்த்து மொத்தம் 101 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.