கோவையில் இன்று 273பேர் கொரோனாவால் பாதிப்பு

கோவையில் கொரோனா நோய் தொற்றுக்கு 273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.

கோவை, போத்தனூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு துணை காவல் ஆய்வாளருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போத்தனூர் காவல் நிலையம் 4 ஆவது முறையாக மீண்டும் அடைக்கப்பட்டது. பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பைச் சேர்ந்த 27 வயது காவலருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் பணியாளருக்கு கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் பணியாற்றிய 30க்கும் மேற்பட்டவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 54, 59 வயது ஆண் பணியாளர்கள் இருவருக்கு இன்று (28.7.2020) கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் பணியாற்றிய பரிவு தற்காலிகமாக அடைக்கப்பட்டு கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர பாப்பநாயக்கன்பாளையத்தில் 8 பேருக்கும், செல்வபுரத்தில் 9 பேருக்கும், பொள்ளாச்சியில் 23 பேருக்கும், சரவணம்பட்டியில் தலா 10 பேருக்கும், கணபதில் 15 பேருக்கும், போத்தனூரில் 13 பேருக்கும்,  குனியமுத்தூர், சித்தாபுதூரில் 7 பேருக்கும், ராம்நகரில் 6 பேருக்கும், காரமடையில் 4 பேருக்கும், பீளமேட்டில் 3 பேர் உள்பட 171 ஆண்கள், 102 பெண்கள் சேர்த்து 273 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,052 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று (28.7.2020) கொரோனா பாதிப்பால் மூவர் உயிரிழந்தனர். திருமலைநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, கோவில்மேடு நீலி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த 81 வயது முதியவர் என மூவர் பலியாகினர். இதனால் கோவையில் வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.