மெக்சிகோவில் கண்டறியப்பட்ட 30,000 ஆண்டு பழமையான பொருட்கள்

மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய குகை ஒன்றில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க மெக்சிகோவில் உள்ள மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள ‘சிக்விஹூயிட்’ குகைகளில் ஆய்வு மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு சிறிய கற்களால் ஆன ஆயுதங்கள் உள்பட 1,930 சுண்ணாம்பு கருவிகளை கண்டுபிடித்துள்ளனர். இவை 31,000 முதல் 12,500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

இந்த பகுதியில் வேட்டை தொழிலில் ஈடுபட்டுவந்த மக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் எனவும், வட அமெரிக்காவின் வேறுசில பகுதிகளிலும் இதேபோன்ற சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 13,000 ஆண்டுகளுக்கு முன்புதான் மக்கள் அப்பகுதிகளில் குடியேறியதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள், அதற்கு முன்னரே அங்கு மனிதர்கள் வாழ்த்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.