கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சமயத்தில் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தனது மாணவர்களை கொரோனா பரவலை தடுக்கும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க ஊக்குவித்து வருகிறது

அதன் ஒரு பகுதியாக சோவையார் என்ற புதிய ஒரு கருவியை இந்த கல்லூரியின் இயந்திரவியல் துறையை சார்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் கேசவ் பிரசாத், கவின் பிரதிப், கார்த்திகேயன் மற்றும் லலித் கிஷோர் ஆகியோர் உதிவி பேராசிரியர் சரவணன் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைத்து உள்ளனர்.

இந்த கருவியானது பயனாளர்கள் தங்களது கைகளை குழாயின் முன்பு காண்பிக்கும் போது எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் தானியங்கியாகவே சோப்பு நீர் அளிக்கும். கைகளை சோப்பு நீர் கொண்டு 20 விநாடிகள் வரை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து, பின்பு அதே குழாயின் முன் காண்பிக்கும்போது தானியங்கியாகவே சுமார் 30 விநாடிகள் வரை தண்ணீர் அளிக்கும், கைகளை தண்ணீர் கொண்டு கழுவிய பின்னர் தானியங்கியாக கைகளை ஹேண்ட் டிரையர் மூலம் உலர்த்தி கொள்ளலாம்.

இக்கருவியின் மூலம் தொடர்பின் மூலம் பரவும் கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்க உதவும். ஒரு மணி நேரத்தில் சுமார் 50 முதல் 60 நபர்கள் வரை இந்த கருவியை பயன்படுத்தலாம்.

இந்த கருவியை உருவாக்கிய மாணவர்களையும், அவர்களுக்கு வழி காட்டிய ஆசிரியர்களையும், உறுதுணையாக இருந்த இயந்திரவியல் துறையின் தலைவர் குணசேகரன் ஆகியோரை கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர்.கே.பி.ராமசாமி கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் முதன்மை செயளாலர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.