வட்டியில்லா கடன் வழங்க கோரிக்கை

தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

தங்கநகை தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் 30 ஆயிரம் குடும்பங்கள் கோவை மாநகரத்தில் மட்டும் உள்ளன. இதில் பெரும்பாலும் 70% , தங்க நகை தொழிலாளர்கள் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகின்றனர். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக  தங்கநகை தொழிலாளர்களுக்கு வேலைசெய்ய தகுந்த ஆர்டர் இல்லாததால் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது அரசு நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே மாதம் 1000 – தருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கநகை தொழில்புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தற்போது நலவாரியத்தில் புதுப்பிக்க மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடவடிக்கையை துரிதபடுத்த வேண்டும். எனவே கோவை மாநகரத்தில் தங்கநகை தொழில் செய்யும் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ஒன்றுக்கு ரூ .5ஆயிரம் வழங்கிட வேண்டும். மேலும் வீட்டில் அமர்ந்து தனியாக தங்க நகைவேலை செய்யும் தொழிலாளர்கள் விதிவிலக்கு அளிக்க வேண்டும் . மேலும் தங்க நகை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் .மேலும் வங்கி மூலம் வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.