விருதுகளின் சொந்தக்காரர் சுனில் கவாஸ்கர் பிறந்ததினம்

உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் 1949 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

இவர் 1966-67 ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக 1975-76 ஆம் ஆண்டு நடந்த போட்டியின்போது 2, 3-வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் விளாசினார்.

இவர் மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, ரானி கோப்பை உட்பட 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பத்ம பூஷண், அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். டான் பிராட்மனின் சாதனையான 29 நூறுகளைத் தகர்த்து. 34 நூறுகள் எடுத்தார். பின் இவரின் சாதனையானது சச்சின் டெண்டுல்கரால் தகர்க்கப்பட்டது.

இவரது பிறந்த தினத்தன்று நடைபெற்ற ஒரு சிறு சம்பவம் மாறியிருந்தால் இன்றைக்கு இவர் இப்படி சுனில் கவாஸ்கராக இருந்திருக்க மாட்டார்.

அன்றைய தினம் குழந்தையைப் பார்க்க வந்திருந்த அவரது உறவினரான நானா காகா என்பவரின் கண்ணில் வித்தியாசமான ஒரு விஷயம் பட்டது. குழந்தையின் காது மடலில் இயற்கையாகவே ஒரு ஓட்டை அமைந்திருந்தது. அதை மிகவும் விசேஷமானதாக நினைத்தார்.

அடுத்த நாள் காலையும் குழந்தையைப் பார்க்க வந்தவர் திடுக்கிட்டார். காரணம் குழந்தையின் காது மடலில் ஓட்டைஇல்லை. உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றார். “இது எங்கள் குழந்தை இல்லை, குழந்தையின் காது மடலில் ஓட்டை இருந்தது. ஆனால் இந்த குழந்தையின் காது மடலில் ஓட்டை இல்லை. குழந்தை மாறிவிட்டது” என்று முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் முந்தைய தினம் பிறந்த குழந்தைகளை சோதித்துப் பார்த்ததில், காதில் ஓட்டை உள்ள குழந்தை ஒன்று மீனவப் பெண்ணிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்ற சமயத்தில் குழந்தை மாறியது தெரியவந்தது. அப்படி காது மடலில் ஓட்டையுடன் பிறந்த குழந்தைதான் பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கர். தன்னுடைய வாழ்க்கை வரலாறான ‘சன்னி டேஸ்’ என்ற புத்தகத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், “அன்றைய தினம் என் உறவினர் மட்டும் காது மடலில் உள்ள ஓட்டையை கவனிக்காமல் இருந்தால், என் விதியே மாறியிருக்கும். இன்று நான் ஒரு மீனவராகி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன்” என்கிறார். கவாஸ்கரின் விதி மட்டுமா, கிரிக்கெட் உலகில் இந்தியாவின் விதிகூட மாறியிருக்கும்.