கிராமப்புறத் திருக்கோயில்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதி

-மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்திலுள்ள  கிராமப்புறத் திருக்கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த மார்ச் 24 முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கான தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை தவிர கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்களில் ஜூலை 1 முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டம், இந்து சமய அறிநிலையத்துறைக்குட்பட்ட கிராமப்புறத்திலுள்ள 731 கிராமப்புறத் திருக்கோயில்களில் மட்டும் கீழ்க்காணும். நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

திருக்கோயில் நுழைவுவாயிலில் தரமான கிருமி நாசினி கண்டிப்பாக வைத்து அனைத்து பக்தர்களுக்கும் கொடுத்து கைகளை சுத்தம் செய்வதை உறுதிபடுத்த வேண்டும்.

பக்தர்கள் பொது வெளியில் எச்சில் உமிழ்தல் கூடாது.·

பக்தர்கள், கால்களை நீரில் சுத்தம் செய்து பின் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும்.

பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும்.

நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

சுவாமி சிலைகளை தொடுதல் கூடாது.

பக்தர்கள் விட்டு செல்கின்ற முகக்கவசம், கையுறைகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கக் கூடாது.

திருக்கோயில்களில் திருமணம் செய்யும் நிலையில் 50 நபர்களுக்கு மிகாமல், சமூக இடைவெளியினை கடைப்பிடித்து நாளொன்றுக்கு ஒரு திருமணம் மட்டும் அனுமதிக்கலாம்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் வருவது அனுமதிக்ககூடாது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, சுவாச நோய், இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்த்திட வேண்டும்.

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி, கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவும், கொரோனா தொற்றுக்காக தொடர்ந்து தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாது பின்பற்றவும், கூட்டத்தினை முழுமையாக தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.