தியேட்டர் மெயில் – குரங்கு பொம்மை…

தமிழ்த் திரை உலகிற்கு குரங்கு பொம்மை ஒரு கை தேர்ந்த படைப்புக் கலைஞனைக் கொடுத்திருக்கிறது (இயக்குநர் -நித்திலன்). இது விளையாட்டு பொம்மையல்ல. பல திறமைசாலிகளின் ஆடுகளம். இரசிகர்களை மதிக்கிற ஒரு படைப்புத் தொழில்நுட்பக்குழு, படம் முழுக்க பரிணமிக்கிறார்கள். பரிமளிக்கிறார்கள்.

கதை, சிலை திருடி விற்கும் கும்பல் தலைவனிடம், வேலை செய்யும் நாயகனின் அப்பா, முதலாளி விசுவாசத்தால் மாட்டிக் கொள்கிறார். அவரைத் தேடும் மகனின் பயணத்தில் குறுக்கிடும் சம்பவங்கள், நிகழும் அழகான காதல் என்று நவரச அனுபவம்.

இயக்குநரின் முதல் படம் என்கிற முதல் காரணம் முதல், இதைக் கொண்டாட பல நூறு காரணங்கள் இருக்கின்றன.

தியேட்டருக்குள்ளேயே கதைக் களத்தைக் கொண்டு வரும் கலை இயக்குநர், ஈ சத்தம் கூட ஈர்க்கும்படி ஒலிக்கலவை, கவனத்தைச் சிதறடிக்காத புதுமையான இசை. அசால்ட்டான வசனமா? (‘பக்கத்துல ஏதாவது நல்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கா?”), ஆழமான வசனமா? (“பணத்தைத் தேடி வரல. என் நண்பனைத் தேடி வந்தேன்!”) கூப்பிடுங்கள் வசனகர்த்தா மடோன் அஷ்வினை என்கிற அளவுக்கு படத்தில் வசனங்கள் ‘கன்’கள்.

கதாபாத்திரச் சித்தரிப்புகளில் (கேரக்டரைசேஷன்ஸ்!) அவ்வளவு நுணுக்கம்! ‘நவீன உடல் மொழியுடன்’… அந்த பிக்பாக்கெட் இளைஞன், விதார்த்தின் யதார்த்த நடிப்பு, பாடிக் கொண்டே காரியமாற்றும் முதலாளி பி.எல்.தேனப்பன், பாலாசிங், ரமா, கிருஷ்ணமூர்த்தி, ரொம்ப நாட்களுக்குப் பிறகு, நம்மை அலங்காரமில்லாமல் வசீகரிக்கும் நாயகி என்று கூப்பிட்டு கூப்பிட்டுப் பாராட்டலாம்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங¢களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நாயகனின் அப்பாவாக… (அப்பப்பா…! அசத்தல் நடிப்பு) பாரதிராஜா. அவர் வரும் இடங்களெல்லாம், காட்சிக்கு ‘முதல் மரியாதை’ கிடைக்கிறது. குரலே நடிக்கிறது. குறிப்பாக, சாகும் தருணத்தில், வில்லனிடம், “ஒரு கதை சொல்லட்டுமா?” என்று விதவித பரிதவிப்பு பாவனைகளோடு அவர் விவரிக்கும் அந்த ‘சிங்கிள் ஷாட்’ நடிப்புக்கு, கிரீடிங் மெயில் தாண்டி, இறுக அணைத்துக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.

அடுத்தது, குமரவேல். இதுவரை பல படங்களில் சின்ன ரோல்களால் இருட்டடிக்கப்பட்ட, (பிரகாஷ் ராஜ் படங்கள் விதிவிலக்கு!) இப்போது முதல் வெளிச்ச வாசலுக்கு வந்தே ஆக வேண்டிய செம கலைஞன் இவர். ஆசைகள் யாவும் நிராசையாகி, இன்னமும் அள்ளக்கையாகவே இருக்கிறோமே என்று திருட்டுத்தனத்திலே இன்னொரு திருட்டுத்தனம் செய்யும் கேரக்டர். தன் நடிப்பில், வரும் பந்துகளை யெல்லாம் பவுண்டரிக்கு விரட்டுகிறார். குரங்கு பொம்மையால், குமரவேலுக்கும், பாரதிராஜாவுக்கும் விருதுகள் நிச்சயிக்கப்படுகின்றன. தியேட்டர் மெயிலின் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

இயக்குநர், ஏற்கெனவே, ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படம் மூலம் கவனம் பெற்றவர். கமல்ஹாசனால் பெரிதும் குறிப்பிடப்பட்டவர். இப்போது பெரிய திரையிலும் தன் திறமையைப் பதியம் போட்டு விட்டார்.

செல்போனைக் காணாமல் பாரதிராஜா அதிர்ச்சியில் சாப்பிட மறந்து திகைக்க, வாசலுக்கு வந்து அந்த செல்போனை தனது கிரிக்கெட் பௌலிங் ஸ்டைலில் குமரவேல் குப்பைத் தொட்டியில் வீச, அதைச் சுமந்து குப்பை லாரி க்ராஸ் செய்யும் இடத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் அதிர்வைக் கூட்டும் இசையில்… இடை வேளை!… வாவ்!

இவ்வளவு உயிரோட்டமான குரங்கு பொம்மையின் வால் (க்ளைமாக்ஸ்)தான் பிளாஸ்டிக் ஆகிவிட்டது.

குமரவேலுக்கு நாயகன் கொடுக்கும் தண்டனை, நமக்கும் பிடிக்கவில்லை. கதைக்கும் பொருத்தமாயில்லை. தன் தவறை கடைசி வரை கர்வமாகச் சொல்லிக்கொள்ளும் வில்லனுக்கு, அப்பா இறந்த வலியால் நாயகன் கொடுக்கும் முடிவு, கொடூரம். அதிலும், அவன் மனைவியைக்  களங்கப்படுத்திக் காட்டி அவனை அழவிட வேண்டுமென்று யார் யோசனை சொன்னது?

படத்தை முடிக்கும்போது, ஒரு திணறல் தெரிகிறது. வழி தெரியாமல், கேரக்டர் அசாசினேஷன் செய்யப்படுகிறாள் வில்லனின் மனைவி. ப்ச்!

இந்த உறுத்தலைத் தவிர, குரங்கு பொம்மை, அந்தப் பையில் மட்டுமல்ல, நம் நெஞ்சிலும் பதிந்து விடுகிறது. கதையில் இருக்கும் கேரக்டர்கள் எல்லோரும் படம் முழுக்க வரும்படி திரைக்கதை அமைந்திருப்பதையும், அப்பா-, மகன் இருவரின் பை பயணத்தையும் முன்- பின்னாகக் குழப்பமில்லாமல் அழகாகக் கோர்த்திருப்பதையும் மெச்ச முடிகிறது.

குறைந்த முதலீட்டில், நல்ல படங்களைச் செய்ய வேண்டும், தரமான திரை அனுபவம் தர வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கும் நித்திலன்களை வரவேற்போம்.

குரங்கு பொம்மை, தமிழ் சினிமாவின் அலமாரியை அலங்கரிக்கும் அழகான பொம்மை!