நாலு பேருக்கு நன்றி

‘நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி, தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் நாலு பேருக்கு நன்றி…’ இந்த பழைய பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது. கொரோனோ தாக்கத்தின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம். இந்நிலையில் ஒரு நாள் முழு ஊரடங்குத் தளர்வு என்றால் உடனே தெருவில் இறங்கிக் கூடுகிறோம். எதற்கு வெளியே வந்தோம் என்பதுகூட சிலருக்குத் தெரிவதில்லை. சரி.. வந்துவிட்டோம். ஏதாவது வாங்கிக் கொண்டு போவோம் என்ற மனநிலையில் ஊர்சுற்றும் மக்களை பெருமளவில் பார்க்க முடிகிறது. கூடுதலாக, இன்னும் சில நகரங்களில் இளைஞர்களால் வீட்டில் இருக்க முடியாமல் வெளியே வீணாக சுற்றுகின்றனர். அடித்தும் பார்த்தாயிற்று, அன்பாகவும் சொல்லி பார்த்தாயிற்று.. கேட்பார் யாருமில்லை என்ற நிலைதான் இங்கே நிதர்சனம்.

இந்த சூழ்நிலையில் நாம் சிலரைக் குறித்து சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர்களில் முதலில், தூய்மைப் பணியாளர்கள். இவர்களுக்கு விடுமுறை ஏதுமில்லை. எப்பொழுதும்போல் இவர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர். வீட்டுக்குள் இருந்தாலும் மக்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை. ஆகவே இவர்களுடைய வேலையும் நின்றபாடில்லை. ஒரு நோய் தொற்றுக்கு பயந்து, உயிருக்கு அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களால் தங்கள் பணியைத் தற்காலிகமாக விட்டுவிட முடிந்தது. இருக்கும் பணத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரம் போவது தெரியாமல், வேண்டியதை வாங்கி சாப்பிட்டு ஓய்வு எடுக்க முடிகிறது.

ஆனால் தூய்மைப் பணியாளர்கள் காலையிலேயே பணிக்குச் சென்று விடுகின்றனர். அதே நாற்றம்.. அதே குப்பை… அதே ஓட்டம்.. இவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒருநாள் தங்கள் தெருவிற்கு இவர்கள் வரவில்லை என்றால் அப்படித் திட்டுகின்றனர் மக்கள். ஆனால் பொறுப்புள்ள குடிமகனாகத் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை மறந்துவிடும் மக்களுக்கு யார் புரிய வைப்பது.. இவர்களின் நிலையை.

அடுத்து, காவல்துறையினர். ஒருபக்கம் நோய் தாக்கம் குறித்து அறியாமலும், அலட்சியத்திலும், பொறுப்பில்லாமலும் பயமின்றித் தெருவில் திரியும் பொதுமக்கள். மற்றொரு பக்கம், நல்ல வெயில் காலம். இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு வேர்த்துவடிய தெருவில் நிற்கும் இவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. ஆனால் பொது சேவை புரிய வேண்டி எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் தைரியமுடனும், நெஞ்சுறுதியுடனும் கடமையாற்றுகின்றனர். ஒரு டீ, காபி கூட குடிக்கவோ, பசித்தால் உடனே சாப்பிடவோ கடைகள்கூட இல்லை. எங்கே, எப்போது கடமை செய்ய வேண்டிவரும் என்று தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் எதற்கும் தயாராய் இருக்கும் இவர்களது மனநிலை பாராட்டுக்குரியது.

இவர்களை அதிகம் கோபப்பட வைப்பது பொதுமக்கள்தான். அதாவது, யாருக்காக இவர்கள் பணி செய்கிறார்களோ, அவர்களே தங்களைக் குறித்து கவலையின்றி இருப்பதால் பல நேரங்களில் மனம் நொந்து பணி செய்ய வேண்டிய சூழ்நிலை.

இவர்களைப்போலவே தூக்கம் இன்றி, மன உறுதியுடன் நோயின் அருகிலேயே இருந்துகொண்டு நோயாளியைக் காப்பாற்றும் சூழ்நிலையில் மருத்துவப் பணியாளர்கள். மருத்துவர்களும், செவிலியர்களும் மனிதர்களைக் காக்கும் கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்பதை நம் கண்முன் தற்போது நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் நோய் தொற்று வரலாம் என்ற ஆபத்தான சூழலில் பணி செய்யும் இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இந்த நோய்க்கு இதுதான் மருந்து என்ற நிலையிலும், நோயாளியின் உடல்நிலை மோசமாக இருந்தால் இவர்கள் பாடு திண்டாட்டம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்தே இல்லாத இந்நிலையில் இவர்கள் வெவ்வேறு உடல்நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது மிகவும் சவாலான காரியம்.

மற்ற பணியாளர்கள் யாருக்கு, என்ன பணி செய்கிறோம் என்று அறிந்து, புரிந்து செயல்படுகின்றனர். ஆனால் மருத்துவர்கள் கண்ணுக்குத் தெரியாத கொடிய கிருமியுடன், சாவுக்கு அருகில் இருந்து பணிபுரிகின்றனர். ஆனால் பொதுமக்களில் சிலர் இவர்களின் ஆத்மார்த்தமான சேவையை சற்றும் மதியாமல் நடந்து கொள்வது நாமும் மனிதர்களுடன்தான் வாழ்கிறோம் என்பதை மறக்க வைக்கிறது. இதற்கு உதாரணமாக அண்மையில் இறந்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுமையை சொல்லலாம்.

நான்காவது, அரசுப் பணியாளர்கள். இந்த பேரிடர் காலத்தில் அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொன்று சேர்க்க, மக்களுக்கு உதவ தற்போதும் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர். நிவாரணங்கள் வழங்குவதாகட்டும், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் ஆகட்டும், நலவாரியப் பணியாளர்கள் ஆகட்டும், அரசு அதிகாரிகளின் ஓட்டுநர்கள் ஆகட்டும், அரசு அலுவலகக் கடைநிலைப் பணியாளர்கள் ஆகட்டும் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். குடிதண்ணீர் விடும் நபர்கள், மின்சாரப் பணியாளர்கள் ஆகட்டும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள், தங்கள் பணி முடிக்க.

அதனால்தான் நம்மால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடிகிறது, உறங்க முடிகிறது. இது எப்படி என்றால், மக்கள்தான் முதலாளி, அரசு அவர்களின் வேலையாள் என்பதற்கு எடுத்துக்காட்டாக. முதலாளியான மக்களின் உயிர் காக்க, அனைத்துப் பணியாளர்களும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து பணி செய்கிறார்கள். இதற்கு பிரதிபலனாக மக்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். வீட்டில் இருந்தால் போதும் என்ற நிலையில் வெளியே செருக்குடன் சுற்றும் மக்களைக் கண்டால் கொஞ்சம் வெறுப்பு வருகிறது…

மேற்கூறிய நான்கு பணியாளர்களையும் சாதாரண நாட்களில் சதா திட்டிக் கொண்டே இருந்த மக்கள், இப்போது அவர்கள் தங்கள் பணியை, உயிரைப் பணயம் வைத்து செய்யும்போது ஏன் மதிக்காமல் நடந்து கொள்கின்றனர் என்று கேள்வியும், கோபமும் வருகிறது. படித்தவர், படிக்காதவர் என்று எந்த வேறுபாடும் இல்லை, பரவாயில்லை, பண்பாடு கூடவா இல்லை இந்த மக்களிடம்.. அரசைக் குறை கூறும் அருகதை சுத்தமாக எங்களுக்கு இல்லை என்பதை நாங்களே நிரூபிக்கிறோம் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்.

இந்த நோய் தொற்று இன்றோடு முடிவதில்லை. இது ஒரு தொடர்கதை என்று அரசு கூறுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் செயலை மாற்றிக்கொண்டு அரசுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்பது வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலரின் வேண்டுகோள். ஏனெனில் இது தனிப்பட்ட ஒருவரின் பிரச்னை இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்னை.

பூந்தமிழன்