‘‘எனக்கும் சினிமாக்கும் சம்மந்தம் இல்லை’’

சினிமா என்ற ஊடகம்  சமுதாயத்தில்  உள்ள பல மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. மேலும் பல கனவுகளை சுமந்து கொண்டு காத்திருக்கும்  இளைய சமுதாயத்தினர் சினிமா துறையில் பல்வேறு வெற்றி வாய்ப்புகளை எதிர்கொள்கின்றனர். ‘கற்றது தமிழ்’ உள்ளிட்ட தரமான படங்கள் தந்த இயக்குனர்  ராமின் தற்போதைய சமூகத்தின்  நிதர்சனத்தை முகத்தில் அடித்தாற்போல  எடுத்துச்சொல்லியிருக்கும் படம் தான் ‘தரமணி’. இப்படத்தில் இயக்குநர் ராம் அறிமுகம் செய்த நடிகை லிஸ்ஸி அந்தோனியை ஒரு அழகான தருணத்தில் சந்தித்தபொழுது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட  விஷயங்களை இங்கே காண்போம்.

‘‘எனக்கும் சினிமாக்கும் சம்மந்தம் இல்லை. எங்க குடும்பம்கூட சினிமா மேல் அக்கறை செலுத்த மாட்டாங்க. இயக்குநர் ராம், ‘தங்க மீன்கள்’ படத்துல நான் நடிக்கணும்னு கூறினார். முதலில் யோசித்தேன். பிறகு என்னால் நடிக்க முடியுமான்னு மனதில் ஒரு சிந்தனை. அப்புறம் ஓகே சொல்லிட்டேன். எப்படியும் நடித்து விடலாம்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. தங்க மீன்கள் படம் நடித்து முடித்த பிறகு சில வருடம் கழித்து தரமணி படம் நடிக்க வேண்டும் என்று சொன்னார். சரி பண்ணலாம்னு முடிவு எடுத்து பண்ணினேன்.

ஆனால் அப்போது இந்த அளவுக்கு தரமணி படம் எனக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று உண்மையில் நான் உணரவில்லை. இயக்குனர் கண்டிப்பாக நல்ல கதாபாத்திரம் தருவார் என்று நினைத்தேன். அதேபோல இப்படத்தில் எனக்கு நல்ல பேரும் புகழும் கிடைத்தது. படம் வெளியானதும் எனது நண்பர்கள் எல்லோரும் என்னை பாராட்டும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது.

தரமணி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்னு சொல்லுவேன். ஒரு பெண்ணின் மனதுக்குள் இருக்கும் வலியை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா என்று தரமணி படம் பார்க்கும்போது உணர முடிந்தது. அதற்கு இயக்குநர் ராமுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.

என் உயிர் தோழி ‘புத்தகம்’தான். என் சுக துக்க காலங்களில் எனக்கு பிடித்த புத்தகங்களை வாசிப்பேன். அப்பொழுது எனக்குள் ஏற்படும் மாற்றங்களையும் உணர ஆரம்பித்தேன். எனக்கு வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. ஆனால் கேமரா முன்னாடி நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா நடித்து முடித்து விடுவேன். அதற்கு காரணம் புத்தகம் என்றுதான் சொல்லுவேன். இது எப்படி சாத்தியம் ஆகும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் எந்த நடிகர், நடிகையையும் பார்த்து இப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சிகள் எடுத்துக் கொள்ள மாட்டேன்.

ஒரு கதை சொல்லும்போது அந்த கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்று என் மனதில் ஒரு வடிவம் அமைத்துக் கொண்டு நடித்து விடுவேன். அப்படி செய்யும்போதுதான்  ஒரு கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெறும் என்பது எனது கருத்து.

பெண்களுக்கு நடக்கும் பிரச்னை பல நுற்றாண்டுகளாக இருந்து வருகிறது. அதை மாற்ற நாம் முயற்சிகள் செய்ய வேண்டும். பெண்கள் எல்லாத்துறையிலும் வெற்றி பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது எனது ஆசை. வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரம் எடுத்து நடிப்பேன். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

  • பாண்டியராஜ்