உணவில் வணிக வன்முறை

ஆசிரியர் தின விழாவில் மருத்துவர் சிவராமன் பேச்சு

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தைச்  சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பிஎஸ்ஜி பள்ளி, கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆரோக்யா சித்த மருத்துவமனை மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது: 

தற்போதைய காலத்தில் மனிதர்கள் பண்டைய பாரம்பரிய உணவுகளை மறந்து விடுகிறார்கள். 2015 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில், “தொற்றாத வாழ்வியல் நோய்” (Non communicable disease) சர்க்கரை வியாதி, தொற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய் உள்ளவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவில் 58.4 மில்லியன். கிட்டத்தட்ட 35 சதவீத மக்கள், அதாவது 14 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளனர். அதேபோல் இரத்த சோகை உள்ளவர்களும் இங்கேதான் அதிகம். உலக அளவில் 8 இலிருந்து 15 வயதிற்கு உள்ளவர்களே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிகம் கிடைக்காதவர்கள்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நாம் ஊட்டச்சத்தில் குறைவாக இருக்கிறோமா? அப்படியான மக்கள்தொகை இங்கே அதிகம் இருக்க¤றதா? நகர்ப்புறங்களிலே இந்த புள்ளி விவரங்களைக் கேட்க கேட்க கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

காரணம், பெருவாரியான குழந்தைகள் காலை உணவு எடுப்பதில்லை. இதனால் இரத்த சோகைக்கு ஆளாகிக் கொண்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களது பெற்றோர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர்கள்  வேலைக்கு சென்று விடுவதால் குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு இல்லை. மேலும் அந்த குழந்தைகளே உணவைத் தயார் செய்து சாப்பிட வேண்டிய நிலையுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அனைத்து வசதிகளும் நிறைந்த வாழ்க்கை. சமீபத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அது ஒரு ஈரல் நோயாளிகளுக்கான விளம்பரம். அதாவது, ‘‘2020 க்குள் அதிகமான குழந்தைகள் ஈரல் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான சிகிச்சைக்கு இம்மருத்துவமனையே சிறந்தது’’ என்று குறிப்பிடப்படுகிறது.

இதில் நாம் எதனை சிந்தனை செய்வது, ஒரு புறம் மெலிந்த இரத்த சோகை கொண்ட குழந்தைகள், மறுபுறம் ஈரல் சார்ந்த நோய்க்கு அதிகம் ஆளாகப்போகிறோம் என்ற செய்தி. இதில் எதை நினைப்பது? Mal Nutrition, அயல்நாட்டு உணவுகளை உட்கொண்டு இந்த “non communicable disease – NCD” எனும்  நோய் தொற்று இல்லாமல் மற்றும் கிருமிகள்  மூலம் பரவாமல் நம்மைத் தாக்கும்  நோய் காரணிகளால் தாக்கப்படும் சூழலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம்?

உலகில் எத்தனையோ சிகிச்சை முறைகள், நாட்டு வைத்தியம், சித்தா, ஆங்கில மருத்துவம் இருக்கின்றன. ஆனால் எதிலும் சர்க்கரை குறைபாட்டையோ, புற்றுநோயையோ, இரத்தக்  கொதிப்பையோ முழுவதுமாகத் துடைத்து எறிகிற சிகிச்சை முறை கிடையாது. மேலும் ஒரு சில நோய்களைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்த முடியாது.

இதற்கு சரியான உணவுக் கட்டுப்பாடு, குடும்ப அரவணைப்பு, சரியான உணவியல் பயிற்சி இருந்தால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். “இந்த ஒரு தலைமுறைதான், தன் அடுத்த தலைமுறை இறப்பதை அருகில் இருந்து பார்க்கப் போகிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஒரு தந்தை தன் மகன் இறப்பைப் பார்ப்பது போன்ற துயரம் வேறு எதுவும் இருக்க முடியாது’’.

“துர்மரணம்” என்று கூறுவது மூத்த தலைமுறை இருக்கும்போதே அடுத்த தலைமுறை இறப்பதுதான். ஆனால் இன்றைக்கு இந்த non-communicable  disease வந்துதான் இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. 25-40 வயதில் உள்ளவர்கள்தான் இந்த நாட்டிலும், வீட்டிலும் மாற்றங்களை கொண்டு வரக் கூடியவர்கள்.

இந்த வயதில்தான் நிறைய இரத்தக் கொதிப்பு, புற்றுநோய்கள், சர்க்கரை நோய் ஏற்படுகின்றன. இது எப்படி வருகிறது என்று பார்த்தால், சிதிலடைந்து போய்க் கொண்டிருக்கும்  நம் உணவுக் கலாச்சாரத்தால்தான். நமக்கு முன்பிருந்த தலைமுறை உணவுக் கலாச்சாரத்தை எப்படி பாதுகாத்தது?பின்னர் அதனை நாம் எப்படி இழந்தோம் என்று பார்த்தால், அவை வணிக வன்முறைகள் காரணமாகத்தான்.

உதராணத்திற்கு நமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் உணவிற்கு முன்னால், இது நமக்கான உணவா? நம் உடலுக்குத் தகுந்த உணவா? நாம் தேடிக் கொண்டிருந்த உணவா? என்றால், அத்தனை கேள்விகளுக்கும், அபாய ஒலி மட்டுமே கேட்கும். இதுதான் இன்று நடக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை. அது காலை, மதியம், இரவு எந்த உணவாக இருக்கட்டும்.

அண்மையில் இந்திய தேசிய உணவியல் ஆய்வகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியா உட்பட 16 நாடுகளில் தினசரி  பயன்படுத்தக்கூடிய 30 வகையான பொருட்களை ஆய்வு செய்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், தடை செய்யப்பட்ட சுமார் 60 வகையான பூச்சிக் கொல்லிகளால் அவை உருவாக்கப்பட்டுள்ளது என்பதே. ஒரு மூட்டு வலிக்கு மருந்து தயாரிக்க வேண்டும் என்றால், பல்வேறு வழிமுறைகளைத் தாண்டி அதைப் பயன்படுத்த மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனால் இங்கே ஒரு உணவை அறிமுகப்படுத்த மூன்றே நாட்கள்தான் ஆகிறது. இதன் அடிப்படையில்தான் அனைத்து உணவுக் கலாச்சாரத்திற்கும் நாம் அடிமையாகிக் கொண்டிருக்கின்றோம்.

முன்னொரு காலத்தில் புற்றுநோய் என்பது வெளிநாடுகளில்தான் அதிகமாக காணப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் பெண்களுக்கான மார்பக புற்றுநோய். பாலூட்டாத தாய்மார்கள் மற்றும் திருமணம் ஆகாத முதிர்கன்னிகளுக்கு ஹார்மோன்களின் மாற்றங்களினால் ஏற்படும் இந்நோய், தற்போது 30 முதல் 35 வயதில் அதிகம் காணப்படுகிறது. மேலும் இது பாலூட்டுகிற, பாலூட்டிக் கொண்டிருக்கிற பெண்களுக்கும் ஏற்படுகிறது.

இவையெல்லாம் இரசாயன உணவுத் துணுக்குகள் மூலம் ஆங்காங்கே கலப்படமாகின்றன. ‘‘மரபு சார்ந்த எந்த உணவுப் பொருட்களும் தீங்கு விளைவிக்கின்றன என்று அறிக்கை கிடையாது’’. இன்று மருத்துவரிடம் அணுகினால் உங்கள் உடலில் Vit-D குறைவாக உள்ளது என்கிறார். உடனே அதற்கு ஒரு விளம்பரம் D positive சாப்பிடறீங்களா? உடனே அதை சாப்பிட நாமும் தயாராகி விடுகிறோம். ஆனால் அதே Vit-d மரபு சார் உணவை உட்கொள்ள மறந்து விடுகிறோம். இந்தியர்களுக்கு அயோடின் குறைவால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. இதை சரி செய்ய, அவர்களுக்கு வணிக முறை மூலம் இந்த அயோடின் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அதன் முடிவு அயோடின் உப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமை அயோடின் குறைவால் தைராய்டு அதிகம் உள்ள நோயாளிகள் இந்தியாவில்தான் அதிகம் உள்ளனர். ஒருபுறம் அறிவியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மறுபுறம் அதனை வணிக சந்தையாக் கிவிடுகின்றனர்.

அயல்நாட்டிலும் இத்தகையான நோய்கள் இருக்கின்றன என்று கூறுகிறோம். ஆனால் அங்கு பெரிய பெரிய விஐபிகளுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறைதான். இங்கு அப்படியா நடக்கிறது?

எனவே, இந்த சூழ்நிலையில்  நாம்தான் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வு, உணவிலிருந்து துவங்கட்டும். அதற்காக நாம் நமது பாரம்பரியத்தை கொஞ்சம் எட்டிப்பார்க்க வேண்டும். நம் மரபு சார்ந்த உணவுகள் பலவற்றில் காப்பு மருந்துகளும் உள்ளனஇன்று எல்லாரும் கூறுவது, அரிசியினால்தான் நோய் வருகின்றது என்று. அவ்வாறில்லை. நமது வாழ்வியலில்தான் பிரச்னை. அரிசியில் அல்ல. அன்று 1,60,000 வகை அரிசி நம் ஊரில் இருந்தது. இன்றும் 169 வகை அரிசியினங்களை அறுவடை செய்துள்ளார் நெல் ஜெயராமன். ஒவ்வொரு நோய்க்கும் ஏற்றவாறு மருந்தாக அரிசிதான் கொடுக்கப்பட்டது.

புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை அரிசிக்கு உள்ளதா? என்று அயல்நாட்டவர் தேடியபோது, அதற்கு தீர்வாக, நம்மூரில் விளைகின்ற கவுண்டி அரிசி உள்ளது என்று தெரிய வந்தது. பாரம்பரிய, கைகுத்தல் அரிசிகள் சர்க்கரையை வேகமாக கொடுக்காது. திணை, கம்பு,   சோளம், கேழ்வரகு போன்ற ஒவ்வொரு தானியத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கிறது. கம்புதான் இருப்பதிலேயே சிறந்த தானியம், அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து, 20 மடங்கு கால்சியம் நிறைந்தது.

இந்த non-communicable  disease க்கு நாம் அன்றாடம் சாப்பிடுகிற தயிர் பச்சடி சிறந்த மருந்தாக உள்ளது.

மேலும் தினசரி  உடற்பயிற்சி, மனப்பயிற்சியுடன் சேர்த்து இது மாதிரியான உணவுகளையும் அன்றாடம் எடுத்துக்கொண்டால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாம். நம் குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளை சாப்பிட நாம்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் வெளிநாட்டு உணவு வேண்டாம்.

நாம் பாரம்பரிய உணவுதான் நம்மையும் நம் நாட்டையும் பாதுகாக்கும்’’ என்று கூறினார்.