எனது பாடலே எனது அங்கீகாரம்

கேரளத்தில் பிறந்து, தன் குரல் வளத்தால் தமிழர்களின் செவிக்கு விருந்து படைத்தவர் 3000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் தன் குரலை பதிவு செய்தவர். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், “புது வெள்ளை மழை” பாடல் பாடி தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பின்னணிபாடகர் உன்னி மேனன்.

அவர் தம் வாழ்க்கை அனுபவங்களை “தி கோவை மெயில்” பத்திரிக்கையுடன் பகிர்ந்து கொண்ட சிலஅனுபவங்கள்:

நான் 1981ல் என் கலைப்பயணத்தை ஆரம்பித்தேன். அப்பா காவல்துறை அதிகாரி. நானும் அத்துறையில் சிறந்தவிளங்க வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பள்ளி, கல்லூரிகளில் மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த காலம் அது.சரி, இதுதான் நமக்கு பொருத்தமான துறை என்று முடிவு செய்தேன். இசையை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், என்னுடைய குரு பி.ஏ.சிதம்பரனார் அவர்களிடம் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு முறை அவர் என்னிடம், நீ நாளை காலை ஸ்டுடியோவிற்கு வந்துவிடு ஒரு ரெக்கார்டிங் இருக்கு என்று கூறினார்.

ஒரு பக்கம் அளவில்லா ஆனந்தம் என்றாலும், மறுபக்கம் முழுமையாக கற்றுக் கொள்ளாமல் எப்படி செயல்படுவது என்ற தயக்கமும் என்னுள்ளே ஊடுருவியது. சற்று மெல்லிய குரலில், சார் நான் எப்படி… என்று கூறினேன். அப்போது அவர், உன்னால் முடியும். உனக்கு தமிழ் தெரியும் அல்லவா… என்றார். நான் தெரியும் என்று அழுத்தமாக கூறினேன். பிறகு என்ன… நீ நாளை காலை வந்துவிடு என்று கூறிவிட்டு புறப்பட்டார். அன்று ஆரம்பித்தது என்னுடைய இசைப்பயணம். மறுநாள் காலை ஸ்டுடியோவிற்கு சென்றதும், ஸ்கிரிப்ட்டை என் கையில் கொடுத்து, பாடு என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.

அந்த பாடலை கேட்டபொழுது தான் என் குரல் வளத்தையும், தன்னம்பிக்கையையும் உணர முடிந்தது. அந்த படத்தின் பெயர் “அமுதும் தேனும்”. ஆனால் அப்பாடல் ஒலித்தது ஸ்டுடியோவில் மட்டும் தான் என்பதில் கொஞ்சம் வருத்தம். அதன் பிறகு நிறைய படங்களில் பாடல்கள் பாட வாய்ப்புகள் கிடைத்தன. பாடகர் ஒவ்வொருவரும் தங்களுக்கான அடையாளங்களை பாடல்கள் மூலம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே நமக்கு கிடைக்கும் சிறந்தஅங்கீகாரம். இத்துறையில் நுழைய இருப்பவர்களுக்கும் அதைத்தான் கூறுகிறேன். மலையாளத்தில் தேவராஜ் சார் மற்றும் தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் போன்ற இசையமைப்பாளர்கள் என்னை இத்துறைக்கு அழைத்து வரக் காரணமானவர்கள்.

அதேபோல் டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., கே.ஜே.ஜேசுதாஸ் பாடல்களை கேட்டு உறைந்து போனதும் உண்டு. இந்த துறையில் நுழைபவர்கள் அனைத்தும் கற்றுக் கொள்ள வேண்டும். துறை சார்ந்த தேடல் அவசியம். மேலும் துறை சார்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உள்ள சினிமாவும், மீடியாக்களும் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர். அதை இளைஞர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக ஒரே நாளில் பிரபலமாகிவிட வேண்டும் என்று நினைத்து தவறாக செயல் படக்கூடாது. அமைதியான வாழ்க்கை மட்டுமே நம்மை நல்வழிப் படுத்தும்.

  • ஆசிரியர் குழு