புரியாத புதிர் – திரை விமர்சனம்

படங்களுக்கான கதைக் களங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு இயக்குனரின் தரம் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. புரியாத புதிர் இயக்குனரின் திரை எண்ணம், அலைபேசியில் படம் எடுத்துப் பரப்பும் பொறுப்பற்றவர்களின் பக்கம் திரும்பியிருப்பது, பாராட்டுக்குரியது.

முதல் காட்சியிலேயே, யாருக்கோ “சாரி” சொல்லிவிட்டு, பல மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள் ஒரு பெண்.

படத்தில் பல இடங்களில் நாம் பதறவேண்டியிருக்கிறது.

நாயகன் கதை, துணை கதா நாயகன் தான், விஜய் சேதுபதி. இப்போதெல்லாம், வாரா வாரம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் சந்திக்க முடிகிறது. ஆனாலும், எல்லாப் படங்களிலும் தன் பாத்திரத்திற்கான நியாயத்தைச் செய்துவிடுகிறார்.

புரியாத புதிரை அவிழ்க்க, காட்சிக்குக் காட்சி பரிதவிக்கிறார். தன்னை விட ஸ்கோப் இருக்கும் நாயகிக்கு அழகாக வழிவிடுகிறார். நிச்சயம் கிரீடிங் மெயில் விஜய் சேதுபதிக்கு உண்டு.

ஆனால், ஒரு முழுப் படத்தைத் தாங்கிப் பிடிக்க, ஒரு சின்ன மெசேஸ் போதுமா? குற்ற உணர்ச்சியே இல்லாத ஹீரோவின் நண்பர்களை போலீசில் மாட்டி விடுவது தான் முடிந்த பிரச்சனைக்குத் தீர்வா? தவறு செய்த நண்பர்களை விட, பெரிதாக ஒன்றுமே செய்யாத, தன் தவறை உணர்ந்த நாயகனுக்கு, இவ்வளவு பெரிய வலியை, நாயகி கொடுக்கலாமா?

நல்ல படத்தில் அங்கங்கே, தற்கொலைகளும், போரடிக்கும் நண்பர்களும், சீரியஸ்னஸ் தெரியாத பாடல்களும் குறுக்கிடுகின்றன. தேவைபடாத காட்சிகளும் நெளிய வைக்கின்றன. இரத்தம் தெறித்துச் சிதறும் அழகியலை(?) …. சாரி … இரசிக்க முடியவில்லை.

வசனங்கள் கடந்து செல்லாமல், குடைந்து செல்கின்றன. (“வாழ்க்கைல சுவாரசியமா முக்கியம்? நிம்மதி தான் முக்கியம்!”)

இசைக் கல்லூரிக் களம். ஒரே கல்லூரியில் படித்தவர்கள், அத்தனை நெருக்கத்தில் பார்த்துக் கொண்டவர்கள், சில வருடங்களில், முன் பின் தெரியாதவர்கள் போல் அறிமுகமாவது, புரியாத புதிராக இருக்கிறது.

தேவையற்ற பேய் பட சஸ்பென்ஸ், உதிரி கதாபாத்திரங்கள், காரணமற்ற திருப்பங்கள் என்று சின்னக் குழப்பங்களில், இயக்குனர் புதிரில் மாட்டிக்கொள்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் படி யாக, இதில் பெரிய தவறு நடக்காதபோது, அதற்குப் பழிவாங்க இன்னொரு தற்கொலையா?

எப்படிப் பார்த்தாலும், பெண்களை பலவீன இதயங்களாகக் காட்ட வேண்டிய அவசியமேயில்லை. வலிந்து திணிக்கப்பட்டுள்ள வலிதான். சைபர் க்ரைம் பிரிவின் மீது காட்டப்படும் குற்றச்சாட்டு, மக்களுக்கு அவ நம்பிக்கையை  ஏற்படுத்தாதா?

இசை சாம். சமீபத்திய வரவு. இளையராஜாவின் ரசிகர் என்பது, பின்னணியில் தெரிகிறது. விக்ரம் வேதாவைத் தொடர்ந்து கவனிக்கப்படுகிறார். ஆகவே, இன்னும் கவனமாகப் பாடல்களில் இயங்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது. கிரீட்டிங் மெயில் சாமுக்கும் உண்டு.

பெண்களின் உணர்வுகளை, அந்தரங்கங்களை கொச்சைப்படுத்திப் பரப்புவது எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதைப் பதட்டமான திரைக்கதையில் சொல்லியிருக்கும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்தடுத்த படங்களுக்கும் பச்சைக் கொடி காட்டலாம்.

  • மோன்னா