ஒரே தேர்வு, ஒரே பாடத்திட்டம் சாத்தியமா?

சுசுதந்திர இந்தியாவில் குடிமக்கள் எல்லோரும் சமம் என்ற  அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது பல சிக்கல்கள் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சமமான வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

தற்போது நடைபெற்று வரும் சில சம்பவங்கள் இந்த அடிப்படையை கேள்விக்குறியாக்கி வருகின்றன. ஏற்கனவே பல குறைபாடுகள் கொண்ட நமது கல்வி முறையின் சமீபத்திய கொடுமையாக இந்த நீட் தேர்வும், அது குறித்து மாநில, மத்திய அரசுகள் நடந்து கொண்ட விதமும், அது தொடர்பான வழக்கும், இறுதியாக அனிதா என்ற பதினேழு வயது இளம்பெண்ணின் தற்கொலையும் அரங்கேறி இருக்கின்றன.

வழக்கம் போல அவரவர் பங்குக்கு தங்களுக்கு சாதகமாக பேசி, எழுதி, போராட்டம் நடத்தி சுய லாபம் பெறுவதுதான் பெரும்பாலோரின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு அனிதாவின் மரணம் பயன்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை குறை சொல்வதும், மாநில அரசு சார்ந்தவர்கள் மத்திய அரசை குறை கூறுவதும், மத்திய அரசு சார்ந்தவர்கள் மாநில அரசை குறை கூறுவதும்தான் நடந்து வருகிறது. தட்டிக்கேட்க திராணியற்ற பொதுமக்கள் கையைப் பிசைந்து கொண்டு வேதனையுடன் வேடிக்கை பார்ப்பதைத் தவிர இதில் வேறு எதுவும் செய்ய முடிய வில்லை.

இந்த பிரச்சினை இன்னும் சில வாரங்களில் மறக்கப்பட்டு விடும்; வேறு பிரேக்கிங் நியூஸ் வந்துவிடும். ஆனால் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு நாமாக அமர்ந்து தீர்வு காணாமல் தீராது. காலாகாலத்துக்கும் அப்படியே இருக்கும். இருந்து விட்டு போகட்டுமே என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. ஏனென்றால் இதில் சிக்கியிருப்பது ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலம். தனது குழந்தையின் கல்விக்காக தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக உள்ள பெற்றோரின் இரத்தமும், வேர்வையும், உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது. எதிர்கால இந்தியா இவர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சுருக்கமாக சொன்னால் நமது நாட்டின் எதிர்காலம் நமது கல்விமுறையில்தான் இருக்கிறது. இன்று இத்தனை ஆயிரம் பேர் ஐ.டி. துறையில் சம்பாதிப்பது இந்த கல்வியை வைத்துத்தான். செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் விடுவதும் இந்த கல்வியை வைத்துத்தான். இன்னும் பல பணிகளுக்கும் கல்வி அவசியம் தேவை. அப்படி இருக்கும் போது இது ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவமாக ஒதுக்கி தள்ளி விட்டு போய்விட முடியாது.

நமது நாட்டிற்கு தேவையான, எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால் எல்லவற்றையும் சமமான கண் கொண்டு, சீர்தூக்கி  பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று தொலை நோக்கு இல்லாத திட்டங்களை கொண்டு வந்து மக்கள் வாழ்ககையை பாழாக்கி விடக்கூடாது. அதை மக்கள் அனுமதிக்கவும் கூடாது.

அதற்கு பெரிய எடுத்துக்காட்டு இந்த நீட் தேர்வு.

தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு பல காலமாக ஒரு கல்வி முறை இருந்து வருகிறது. அதில் பயின்றவர்கள் இங்குள்ள தேர்வு முறைப்படி தேர்வு பெறுகிறார்கள். பொறியியல், மருத்துவம் போன்ற கல்வி பயில்கிறார்கள். தொழில் முறையில் பணியாற்றுகிறார்கள். ஆங்காங்கே குறைகள் உண்டு. என்றாலும் அதில் பெரிய சிக்கலோ, திறமைக்குறைவோ இருப்பதாக தெரியவில்லை. தனியார் கல்லூரிகளின் அதிக கல்விக் கட்டணம் போன்றவை இருந்தாலும் சிஸ்டம் பாதித்திருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில் திடீரென்று நீட் தேர்வு என்ற ஒரு தேர்வு முறை வருகிறது.  பன்னிரண்டு ஆண்டு காலம் அரசு வகுத்த ஒரு கல்விமுறையில், பாடத்திட்டத்தில் படித்த ஒரு மாணவர் திடீரென் அறிமுகப்படுத்தப்படுகின்ற  இந்த நீட் தேர்வு மூலம் தகுதியிழக்கிறார். தகுதியற்ற ஒருவர் பணம் கொடுத்து பயிற்சி பெற்று மருத்துவ கல்வியில் இடம் பெற்று மருத்துவராக முடிகிறது. இதை செய்வது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அல்ல; மக்கள் நல அரசு. இதற்கு பல்வேறு வியாக்கியானங்கள் தரப்படுகின்றன.

இதன் மூலம் சொல்லப்படுவது என்ன? அரசாங்கம் இது வரை நடத்தி வந்த கல்வி முறை, பாடத்திட்டம், தேர்வு முறை எல்லாம் மதிப்பிழந்தவை, அல்லது காலாவதியானவை என்றுதானே அர்த்தம்? இதற்கு யார் பொறுப்பு அரசாங்கமா? அப்பாவி மாணவர்களா?

நமது  நாட்டில் ஒரே கல்வி முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த முடியாத அரசு, ஒரே தேர்வு என்ற நீட் கொண்டு வருவது என்ன நியாயம்? மக்கள் நல அரசு செய்யலாமா?

ஒரு குக்கிராமத்தில் சோற்றுக்கே வழியில்லாமல் இருக்கும் பெற்றோரின் குழந்தையாக பிறந்து, நடந்து போய் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும், நகரத்தில் படித்த வசதியான பெற்றோரால் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து எல்லாவகையிலும் சீராட்டி வளர்க்கப்படும் மாணவனும் ஒன்றா? இருவருக்கும் ஒரே தேர்வு முறை என்பது எந்த விதத்தில் சரியாகும்? மேலும் ஏதோ ஒரு வகையில் இழுத்துப் பிடித்து அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைக் கேற்றவாறு ஒரு தேர்வு முறை மூலம் மருத்துவக்கல்வி வரை இயங்கி வரும் போது அதன் குரல்வளையை நெறிப்பதªன்ன நியாயம்? எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் நீட் தேர்வு போன்றவை என்ன நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகினறன?

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கல்வியை மானத்தும் மேலாக, உயிருக்கும் மேலாக நினைத்து படிக்கும் மக்கள் சமூகத்திடம் குறையில்லை. சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் அனைவருக்கும் பொதுவான, தரமான இலவசக் கல்வியை வழங்க முடியாததற்கு அரசுகள்தான் வெட்கப்பட வேண்டும். ஆங்காங்கே காசுக்கு தகுந்த பணியாரமாக கல்வியை வித, விதமாக விற்கும் கல்வி நிலையங்களை அனுமதித்து வளரவிட்டது அரசா? மக்களா?

இதையெல்லாம் செய்து விட்டு இன்று ஒரே நாடு, ஒரே தேர்வு என்று வேதம் ஓதுவது எவ்வகையில் நியாயம்?

எல்லாவற்றுக்கும் மேலாக கல்வி என்பது அரசாங்கம் மட்டும் சார்ந்ததல்ல. கல்வி என்பது ஒரு நாட்டின் எதிர்காலம். இதில் துறை சார்ந்த அனைவரின் கருத்துகளையும் கேட்டு ஆராய்ந்து நமது நாட்டின் நிலைமைக்கு ஏற்ப கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும். ஏதோ மாதிரிகளை இங்கு அப்படியே செயல்படுத்த நினைக்கக்கூடாது. குறைகள் இருக்கலாம். அவற்றை களைய வேண்டும் அதை விடுத்து பெரிய தீமைகளை உருவாக்கும் களைகளை நட்டு விடக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. உலகத்துக்கே பல வகையிலும் எடுத்துக்காட்டாக திழ்ந்த நாடு. அதன் மாண்பை காப்பாற்றும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

அனிதா போன்றவர்கள் கேட்பது கல்விதான்.  தூக்கு கயிறோ, அஞ்சலி கவிதையோ, போரட்டங்களோ அல்ல. அதை வழங்க கண்டிப்பாக அரசாங்கத்தால் முடியும். அதற்காக இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.

அப்படிச் செய்தால் கூடவே நமது ஜனநாயகத்தின் மாண்புகளும் காக்கப்படும். அதுதான் உண்மையான நல்லரசாக, வல்லரசாக இருக்க முடியும். மேலும், நீட் தேர்வு தான் தரமான கல்விக்கு தீர்வு என்றால், ஏன் ஒரே தேர்வு, ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரக் கூடாது?