தன்னார்வலர்களுக்கு பேரூர் ஆய்வாளர் அறிவுரை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் இரவு பகலாக ரோந்துப் பணியிலும், காவல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சில காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை ஏற்படவே, அந்தந்த பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், பேரூர் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பேரூர் காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த பதினைந்து நாட்களாக, காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பேரூர் காவல்நிலையத்தில் அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசிய ஆய்வாளர் சுகவனம், பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், காவல்துறையினரோடு இணைந்து பணியாற்ற வேண்டும். போலீசார் இல்லாமல் வாகனங்களை தடுக்க கூடாது. அடையாள அட்டையை தவறாக பயன்படுத்த கூடாது. இரு சக்கரவாகனங்களில் வருவோரிடம் முக கவசங்களை அணிய சொல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை தன்னார்வலர்களுக்கு எடுத்துச் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் தலைமையில், பேரூர் காவல் நிலைய சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பேரூர் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் காவலர்களுடன் இணைந்து, அடையாள அட்டையுடன் தன்னார்வலர்கள் பணியாற்றுவது பேரூரில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.