திரைப்பட துணை நடிகர், நடிகைகளுக்கு நிவாரணம்

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வரும் பொள்ளாச்சி பகுதி திரைப்பட துணை நடிகர், நடிகைகளுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை லொக்கேஷன் மேனேஜர் வி.கே.ராஜன் நேரடியாக வழங்கினார்.

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பொள்ளாச்சி முக்கிய இடமாக உள்ளது. இதனால் இங்கு நடைபெறும் படப்பிடிப்பு காலங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை நம்பி பொள்ளாச்சி பகுதிகளை சுற்றி சுமார் 200 க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள் உள்ளனர். தற்போது கொரானா வைரஸின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைத்துறையில் பணியாற்றும் கோவை, பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த திரைப்பட துணை நடிகர், நடிகைகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக பொள்ளாச்சியை சேர்ந்த லொக்கேசன் மேனேஜர் வி.கே.ராஜன் அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகளுக்கு இந்த உதவியை செய்து வரும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது ஏற்ப்பட்டுள்ள இந்த சூழ்நிலையால் திரைப்பட துறை உட்பட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் வசித்து வரும் திரைப்பட துறை துணை நடிகர், நடிகைகளின் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்த பொருட்களை வழங்குவதாகவும், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் மேலும் வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.